72 வருட இலங்கை திரைப்படத்துறை வரலாற்றில் 19 ஆவது ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (26) தாமரைத் தடாக கலையரங்கில் கோலாகலமாக இடம்பெற்றது.
2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை திரையிடப்பட்ட 79 திரைப்படங்களில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய 27 கலைஞர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முன்னோடி விருதுகள் மற்றும் ´சுவர்ணசிங்ஹ´ விருது, ´விஸ்வ கீர்த்தி´ விருதுகள் 11 பேருக்கு ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது வாழ்நாள் விருதாக வழங்கப்படும் ´சுவர்ணசிங்ஹ´ விருது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய, முன்னணி திரைப்பட நடிகை நீதா பெர்ணான்டோ, பிரபல திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் யாப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதேநேரம் அனோமா ஜனாதரி மற்றும் திரைப்பட இயக்குனர் சஞ்சீவ புஸ்பகுமார ஆகியோருக்கு ஜனாதிபதியினால் ´விஸ்வ கீர்த்தி´ விருது வழங்கப்பட்டதுடன், சாந்தி அபேசேகர, என்டர் கிரகரி, கே.டி. தயானந்த, சுவர்ணா கஹவிட்ட, சுனில்சோம பீரிஸ், எலெக்சான்டர் பெர்னாண்டோ ஆகியோருக்கு முன்னோடி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேர்னார்ட் வசந்த உள்ளிட்ட பெருமளவான கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)