இந்தியா சென்னையில் போக்குவரத்து பணிமனை விபத்தில் சிக்கி, புதுமாப்பிள்ளையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் திருமணம் முடித்து வெறும் 24 நாட்களிலேயே மனைவியை பிரிந்துள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில், நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளனர்.
அச்சமயத்தில் சோதனை செய்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியுள்ளது. இதில், பணிமனை ஓய்வறையில் இருந்த ஓய்வெடுத்துகொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள், இடர்பாடுகளில் சிக்கி காயமடைந்த 7 பேரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
இந்த நிலையில் உயிரிழந்த பாரதி 24 நாட்களுக்கு முன்பு தான் நாகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழத்தியது.
அப்போது நாகேஸ்வரி கூறியதாவது, எனது கணவருக்கு அதிகாரிகள் திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாளே எனது கணவர் பணியில் சேர்ந்து கையெழுத்து போட்டார்.
திருமணத்திற்காக எனது கணவர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் அவருக்கு உயர் அதிகாரிகள் ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். நேற்று பணிக்கு வந்த பிறகு நான் எனது கணவருக்கு இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை தொலைபேசியில் அழைத்தேன் செய்தேன்.
ஆனால் அவர் எனது தொலைபேசியில் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அந்த அளவுக்கு பணி சுமை இருந்துள்ளது. போக்குவரத்து துறையில் முக்கியமான பணியான தொழில்நுட்ப ஊழியர்களின் ஓய்வு அறை தரமற்ற வகையில் உள்ளது.
எனது கணவரின் இறப்புக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் இவ்வாறு நாகேஸ்வரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.