எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் என்று நடிகை ஜோதிகா கூறினார்.

ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராட்சசி படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் ஜாக்பாட் படம் திரைக்கு வருகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

ஜாக்பாட் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். இது நகைச்சுவை படம் போல் தெரியும். அதற்கு பின்னால் கதையும் இருக்கும். பெரிய கதாநாயகனுக்கு படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் இந்த படத்திலும் நிறைய இருக்கிறது. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறேன்.

நம் கையில் காசு நிறைய வந்தா நிச்சயமா அதை திருப்பி மற்றவங்களுக்கும் கொடுக்கணும். அதுதான் ஜாக்பாட் படத்தின் முக்கியமான கரு. பல இளம் இயக்குனர்கள் எனக்காகவே கதைகளை எழுதுகிறார்கள். அது சந்தோஷமா இருக்கு. ஆனால் ரசிகர்கள் கதாநாயகிகள் படங்களுக்கு பெரிய ‘ஓபனிங்’ கொடுப்பதில்லை. அதுதான் கஷ்டமா இருக்கு. பெரிய ஹீரோக்கள் படம்னா போகிறார்கள். ஹீரோயின் படங்களையும் வரவேற்க வேண்டும். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் பெண்கள் படத்திற்கும் இசையமைக்க வேண்டும். ராட்சசி படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளர்கள் என்று பலர் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்லை. பயம் இருந்தால் படமே நடிக்க மாட்டேனே?

ராட்சசி படத்துக்கு பிறகு சிலர் ஈரோட்டில் ஒரு அரசு பள்ளிக்கு பஸ் கொடுத்துள்ளனர். சிலர் பள்ளிக்கு நிதி வழங்கி உள்ளனர். இதுதான் பெரிய பாராட்டு. நான் படம் இயக்க மாட்டேன். என் லட்சியம் என்னவென்றால் கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு எனது படம் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும்.” இவ்வாறு ஜோதிகா கூறினார்.

Related posts