தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது வேட்பாளரையன்றி, தேசிய வேட்பாளரையே களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த அவர்;
ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் மீது பற்றுள்ளவராகவும் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பொறுப்புடன் செயற்படுபவராகவும், தேசிய வளங்களை விற்காதவராகவும் இருப்பது அவசியம்.
நிறுத்தப்படும் வேட்பாளர், அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவன்றி சகல கட்சிகளுக்கும் தலைமைத்துவம் வகிப்பவராகவும் சிறந்த நோக்கம் கொள்கையுடையவராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் தெரிவித்த அவர்: வட,கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், வட, கிழக்கு மாகாண சபையின் காலம் நிறைவுற்றுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பில் வாய் திறக்காமல் இருப்பது விந்தையாக உள்ளது என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்