வடக்கில் இருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை (02) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகி உள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழில் இருந்து நாளை காலை 6.25 க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம், காலை 7.43 க்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 9.02 க்கும் மாலை 4 மணிக்கு கொழும்பை சென்றடையவுள்ளது.
இரண்டாவது புகையிரத சேவையில் 4088 இலக்க புகையிரதம் மாலை 5.40 க்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு யாழ். புகையிரத நிலையத்தை 6.16 க்கு வந்தடையும். அங்கிருந்து 6.40 க்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
இதுவரையில் காங்கேசன்துறையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு யாழ். வந்தடைந்து, யாழில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை நாளை முதல் காங்கேசன்துறையில் இருந்து இரவு 7.30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை 8.10 க்கு வந்தடையும்.
மீண்டும் யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து 8.25 க்கு புறப்படவுள்ள இந்த புகையிரதம் அதிகாலை 4.40 க்கு கொழும்பை சென்றடையும்.
மேலும், இன்றைய தினம் காலை 08.50 க்கு கொழும்பில் இருந்து ஆரம்பமான முதலாவது புகையிரத சேவை மாலை 6.31 க்கு யாழ். புகையிரத நிலையத்தை வந்தடையும். இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை 3.25 க்கும், கிளிநொச்சி புகையிரத நிலையத்தை மாலை 4.56 க்கும் வந்தடையவுள்ளது. சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் போன்று இதற்கான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் இந்த சேவைகள் மூலம் பணிபுரிவோர் பெரிதும் அனுகூலமடைவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது புகையிரத சேவை கொழும்பில் இருந்து இரவு 7.15 க்கு புறப்பட்டு அதிகாலை 4.20 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
இதுவரையில் கொழும்பில் இருந்து 8.30க்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் இரவு 9 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை காலை 5.04 க்கு வந்தடையவுள்ளது.
கொழும்பு மற்றும் யாழில் இருந்து தினசரி காலை மாலை இடம்பெறவுள்ள இந்த இரண்டு புதிய புகையிரத சேவைகள் பரீட்சார்த்தமாக ஒரு மாதம் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய தலைமை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்