ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து நடிகைகள் குஷ்பு, அமலாபால் கருத்து தெரிவித்துள்ளனர்.
காஷ்மீருக்கு நீண்ட காலமாக அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி உள்ளது. அத்துடன் அந்த மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இதுகுறித்து நடிகை குஷ்பு டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், “காஷ்மீரையும், இந்தியாவின் மற்ற பகுதிகளையும் பிரிக்கும் கண்ணுக்கு தெரியாத எந்த கோடாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டியதே. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கை அமைதியாக்கி விட்டுத்தான் அதை செய்ய வேண்டுமா? இதில் பா.ஜனதா எதற்காக பயப்படுகிறது. தலைவர்களை கைது செய்து இருப்பதன் மூலம் அந்த கட்சியின் பயம் நமக்கு தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அமலாபால், காஷ்மீருக்கு சலுகைகள் வழங்கிய 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கியதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, “370 சட்டப்பிரிவை நீக்கியது ஆரோக்கியமான நம்பிக்கையூட்டும் செயல். இதன் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடியால் இந்த காரியம் சாத்தியம் ஆகி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை பிரதமர் அமல்படுத்த வேண்டும். வருகிற நாட்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒற்றுமையே அமைதிக்கு வழிவகுக்கும்” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு அமலாபால், “மதத்தாலும், இனத்தாலும் பல்வேறு தாக்குதல்கள் நிறைந்த உலகில் மனித நேயம் வளர வேண்டியது அவசியம். மனிதம் வளர்க்க அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்” என்று கூறியிருந்தார்.