முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜுக்கு நேற்றிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்தார்.
சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. மயனத்திற்கு சென்ற பின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.