இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை போக மாட்டேன் என வைகோ ஆவேசமாக கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார். காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை; அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கி விட்டார்களா?
திமுக எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள்; காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் தேர்வானதில்லை. காங்கிரஸ் ஒரு இனத்தையே அழித்த பாவி. ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ். ’இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை. போக மாட்டேன்.
அமித்ஷா கூறிதான் மாநிலங்களவையில் நீங்கள் காங்கிரஸை விமர்சித்ததாக அந்தக் கட்சி கூறுகிறதே? என்ற கேள்விக்கு அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை. பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளவன் நான் என கூறினார்.