குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) கித்சிறி ஜயலத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்திக சிறிவர்தன குருணாகல் மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மாஅதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கைது தொடர்பாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் மீது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள பௌத்த தாய்மாரை கருத் தரிக்காத வகையில் சத்திரசிகிச்சை செய்ததாக, திவய்ன பத்திரிகையில் வெளியான செய்தியை அடுத்து, இரு தினங்களின் பின்னர் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த செய்தி தொடர்பான தகவல்களை, குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் வழங்கியதாக, திவய்ன பத்திரிகையின் ஊடகவியலாளர் ஹேமந்த ரன்துனு, CID இற்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதி பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கை, விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என CID யினர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததையடுத்து, அவரை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டதோடு, கடந்த ஓகஸ்ட் 02 ஆம் திகதி முற்பகல், அதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்த போதிலும், பிற்பகலில் (ஒரு சில மணித்தியாலங்களில்) அவ்வனுமதியை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது.
DIG கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்வது, வைத்தியர் ஷாபியை காப்பாற்றுவதற்கான அரசியல் நடவடிக்கை என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் 08 ஆம் திகதி மீண்டும் அவரை இடமாற்றுவதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியிருந்தது.
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், கடந்த ஜூலை 25 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.