அமெரிக்காவானது வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாரான தீப்பெட்டியாக மாற்றி வருவதாக ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப் நேற்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வாபஸ் பெற்று ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளை முடக்கும் வகையிலான தடைகளை மீள விதித்ததையடுத்து இரு தரப்பு நாடுகளுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஹொர்மஸ் நீரிணை மூலமாக வளைகுடா பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
கடந்த மே, ஜூன் மாதங்களில் 6 எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடிவைப்புகளால் சேதமடைந்தமை மற்றும் கடந்த ஜூலை மாதம் பிரித்தானிய கொடி பறக்கவிடப்பட்ட எண்ணெய் தாங்கி கப்பலொன்றை ஈரான் கைப்பற்றி தடுத்து வைத்தமை என்பனவற்றையடுத்து அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தது. அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும் இலக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் கட்டாரை அடிப்படையாகக் கொண்ட அல் ஜஸீரா ஊடகத்துக்கு ஜாவத் ஸரீப் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அளித்த விசேட பேட்டியில், அந்த நீரிணை குறுகியது. வெளி நாட்டுக் கப்பல்கள் அங்கு தமது பிரசன்னத்தை அதிகரித்துள்ள நிலையில் அது பாதுகாப்புக் குறைந்ததாக மாறியுள்ளது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அந்தப் பிராந்தியத்தில் தமது ஆயுதங்களை நிரப்புவதால் அது தீப்பற்றி எரியத் தயாரான தீப்பெட்டியாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
கட்டாரின் டோஹா நகருக்கு விஜயம் செய்துள்ள ஸரீப் கட்டார் ஆட்சியாளர் தமிம் பின் ஹமாத் அல் தானியுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத் தளங்களைக் கொண்ட நாடாகவுள்ள கட்டார், அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல்கள் கிளர்ந்தெழுவதற்கான சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் ஈரானுடனும் அமெரிக்காவுடனும் நல்லுறவைப் பேணி வரும் ஈராக் மேற்குலக நாடுகளில் படையினர் நிலைநிறுத்தப்படுவது அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலையை அதிகரித்து வருவதாக கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
“மேற்குலகப் படையினரின் பிரசன்னம் பதற்ற நிலையை அதிகரிப்பதாகவுள்ளது. பேச்சுவார்த்தைகளினூடாக பதற்ற நிலையை தணிவிப்பதை ஈராக் நாடுகிறது” என ஈராக்கிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் அல் ஹக்கீம் தெரிவித்தார்.