வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை
28 பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் போட்டி இருந்தது. ஏற்கனவே 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்ததால் இந்த தொகுதியிலும் தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்ததால் அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினரும் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
முன்னிலை
முதல் சுற்றிலேயே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 25,719 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை விட 913 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து 2-வது சுற்று, 3-வது சுற்று, 4-வது சுற்று என அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் பின்தங்கியே இருந்தார்.
5-வது சுற்றில் ஏ.சி.சண்மும் 1,34,593 வாக்குகளும், கதிர்ஆனந்த் 1,25,578 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்மூலம் 5-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 9,015 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்றில் ஏ.சி.சண்முகம் 5,227 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 7-வது சுற்றில் ஏ.சி.சண்முகம் 22,942 வாக்குகளும், கதிர்ஆனந்த் 28,785 வாக்குகளும் பெற்றனர். இந்த சுற்றின்படி ஏ.சி.சண்முகம் மொத்தம் 1,80,715 வாக்குகளும், கதிர்ஆனந்த் 1,81,331 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் மூலம் ஏ.சி.சண்முகத்தைவிட, கதிர்ஆனந்த் 616 வாக்குகள் அதிகம்பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து கதிர்ஆனந்த் முன்னிலை பெற்று வந்தார்.
கடைசிவரை பரபரப்பு
படிப்படியாக கதிர்ஆனந்தின் வாக்குவித்தியாசம் அதிகரித்து வந்தது. 11-வது சுற்றில் ஏ.சி.சண்முகத்தைவிட 14,214 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 13-வது சுற்றில் 19,228 வாக்குகள் அதிகம் பெற்ற கதிர்ஆனந்தின் வாக்கு வித்தியாசம் பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கியது. கடைசியாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.
மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதனால் வேலூர் தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று நினைத்திருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று வந்தார். இதனால் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதேநேரத்தில் 7-வது சுற்றில் இருந்து தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் முன்னிலை பெறத்தொடங்கி தொடர்ந்து கடைசிவரை முன்னிலை வகித்து வந்தார். ஆனாலும் வாக்கு வித்தியாசம் மிகக்குறைந்த அளவே இருந்து வந்தது. இதனால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை நிர்ணயம் செய்யமுடியாமல் கடைசிவரை இரு கட்சியினரிடமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியாக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றிபெற்றார்.