தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான பீடாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியுள்ளது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்து தரம் ஒன்றிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ் மொழி மூலமான கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்குமே இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி கல்வியியற் கல்லூரி பீடாதிபதிகளுக்கான 06 வெற்றிடங்களும் உப பீடாதிபதிகளுக்கான வெற்றிடங்கள் 17 உம், ஆசிரியர் கலாசாலை அதிபர் வெற்றிடங்கள் 03 இற்குமான விண்ணப்பங்களே தற்போது கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா- ஸ்ரீபாத கல்விக் கல்லூரி, யாழ்ப்பாணம், தாழங்குடா, தர்கா நகர் ஆகியவைகளுக்கான பீடாதிபதிகளுக்கும் கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை போன்ற ஆசிரியர் கலாசாலைகளின் அதிபர்களுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
(பெரியநீலாவணை தினகரன் நிருபர் – எம்.எம். ஜெஸ்மி)