கோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டோரின் பட்டியலை அந்நாடு அண்மையில் இணையத்தளத்தின் ஊடாக வெளியிட்டிருந்தது.

எனினும், இந்தபெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பிடிக்கவில்லை.

வேறொரு நாட்டின் பிரஜாவுரிமையை கொண்டுள்ள ஒருவர், இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தோரின் பெயர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த போதிலும், இந்த பெயர் பட்டியலிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டதாக, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவர் அறிவித்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் கோட்டாபய ராஜபக்ஷ அன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

மே மாதம் மூன்றாம் திகதியுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்படவில்லை என்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை தேவையேற்படின் சமர்ப்பிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் களம் இலங்கையில் சூடு பிடித்துள்ள பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்தும் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பிபிசி)

Related posts