ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பகல் 11 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அன்று காலை 6.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்திய ராணுவம் தரப்பிலும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய படைகள் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இருநாட்டு படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.