ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சனைகளை திசை திருப்ப போலியான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என சர்வதேச சமூகத்தை எச்சரிப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் பக்கத்தில்,” நாச செயல்களில் ஈடுபடுவதற்காக இந்திய எல்லையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், மற்றும் சிலர் தென் மாநிலங்களிலும் ஊடுருவி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
இந்த குற்றச்சாட்டுகள் காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி என்பதை கணிக்க முடிகிறது. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சனைகளை திசை திருப்ப போலியான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது. ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வந்தது. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திருத்தியது. இதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.