உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது.
இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அந்நாட்டு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் அமேசான் காட்டின் தீயை அணைக்க, வருண பகவானின் உதவிக்காக பிரார்த்திப்போம் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நம்மால் அமேசான் காட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. ஆனால் அமேசானில் பொருட்கள் வாங்கவும், அமேசான் பிரைம் பார்க்கவும், ஆர்டர் போடவும் மட்டும் தான் தெரியும். எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நேரத்தில் ஒன்றை மட்டும்தான் செய்ய முடியும். அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுற்றிலும் மரங்களை நடவு செய்வதன் மூலம் நம் இடங்களை அமேசான்களாக மாற்ற முடியும்! அதே நேரம் அமேசான் காட்டின் தீயை அணைக்க மழையின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.