“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். ‘கோட்டா எதிர்ப்பலை’ வடக்கு, கிழக்கில் 100 சதவீதம் வீசுகிறது. வேறு எவரையாவது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தால் அத்தகைய எதிர்ப்புகள் வந்திருக்காது. ஆனால், யுத்தத்தின் பின்னரும் தமிழ் மக்களை அவர் வாழ விடவில்லை என்பதாலேயே ‘அன்றி கோட்டா’ என்ற எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மலையகத்திலும் முழுமையான வாக்குகள் எமது கூட்டணிக்குக் கிடைக்கும்” என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
‘தினகரன்’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் போதே மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி: நீங்கள் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலொன்று நெருங்கியுள்ள சூழலில் சமகால அரசியல் நிலைவரங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எவ்வித குழப்பமும், தடுமாற்றமும் இல்லை. கடந்த காலத்தில் நாம் எடுத்திருந்த தீர்மானங்களும், செயற்பாடுகளும் தோல்வியில் முடியவில்லை. அரசியல் கணக்கு, வழக்குகள் எமக்கு நன்றாகத் தெரியும்.அவர்களைப் போன்று வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்ற அவசரம் எமக்கில்லை. பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகின்றோம். அந்தக் கூட்டணிதான் எமது அத்திவாரம். எமது கொள்கைத் திட்டங்களையும் வகுத்துள்ளோம். பிரதமரிடம் அதனைக் கையளித்துள்ளோம். அதன் பின்னர்தான் வேட்பாளர் தெரிவு இடம்பெறும். மக்களுக்கு வேலைத் திட்டம்தான் அவசியம். நாம் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது. அவற்றை எவ்வாறு செய்வது? நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது? அதன் அடிப்படையில்தான் வேட்பாளரை நாம் அறிமுகப்படுத்துவோம். இம்முறை 1.7 மில்லியன் புதிய இளைய வாக்குகள் அளிக்கப்படவுள்ளன. கடந்த முறை 1.4 மில்லியன் இளைஞர்கள் புதிதாக வாக்களித்திருந்தனர். ஆகவே, மொத்தம் 3.1 மில்லியன் இளைய புதிய வாக்குகள் உள்ளன. அவர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள்தான் பெற்றோருக்கு எது நல்லது, எது பிழையென தெளிவுபடுத்துவார்கள். கடந்தமுறையும் அவ்வாறுதான் நடந்தது.
கேள்வி: புதிய கூட்டணியை அமைக்கும் செயற்பாடு எப்போது நடைபெறும்?
பதில்: இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அமைக்கப்படும். அதன் பின்னர் கொள்கை மற்றும் வேட்பாளர் குறித்த விடயங்கள் இறுதிப்படுத்தப்படும்.
கேள்வி: உங்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள சிறுபான்மைக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது?
பதில்: சிறுபான்மைக் கட்சித் தலைவர்களதும், எமது கருத்துகளும் பெரும்பாலும் ஒத்தவையாகவே உள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ போன்ற ஒருவர் எதிர்த்தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து சிறுபான்மை இனங்களும் ஒரே நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. எவ்வாறான மாற்றுக் கருத்துகள் அவர்களுக்குள் இருந்தாலும், அவர்கள் கோட்டாபய எதிர்ப்பாளர்கள் என்பதுதான் உண்மை. அதனால் எமக்கு மிகவும் இலகுவாக தோற்கடிக்கக் கூடிய ஒருவரைத்தான் பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக களமிறக்கியுள்ளது.வெற்றி பெற முடியாத ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளனர். எதிரணியினர் ஓரிருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளனர். நாம் அவ்வாறான அழுத்தங்களுக்கும் அடிப்பணியப் போவதில்லை. முழு வடக்கும், முழு கிழக்கும் ‘கோட்டா எதிர்ப்பாக’ மாறியுள்ளன. ஆகவே, அங்கு நாம் முழுமையான வாக்குகளுடன்தான் எமது தேர்தல் பணியை ஆரம்பிக்கவுள்ளோம். ஆனால், இவர்கள் பூச்சியத்திலிருந்து பணியை ஆரம்பிக்கின்றனர். வடக்கின் பிரதான கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன. வடக்கின் முன்னாள் முதலமைச்சர், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் கோட்டாவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷ தேசியத் தலைவர் என்றும், அவர் பெரும்பான்மையான சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் ஒரு நிலைப்பாடு உள்ளதே?
பதில்: பௌத்த வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் எவ்வாறு தேசியத் தலைவராக வர முடியும்? தேசியத் தலைவர் என்பவர் அனைத்து மதங்களுக்கும், அனைத்து இனங்களுக்கும் மதிப்பளிக்கும், அவர்களது கருத்துகளுக்கு செவிமடுக்கும் ஒருவராக இருக்க வேண்டும். அவ்வாறில்லாது இனவாத, மதவாதங்களைத் தூண்டும் அவர் போன்ற தலைவர்களுக்கு மீண்டும் இந்த நாட்டில் ஒருபோதும் வாய்ப்புக் கிடைக்காது.
கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் குழப்பகரமான சூழ்நிலைதான் இன்னமும் தொடர்கிறது. உண்மையில் அவரின் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதா?
பதில்: அமெரிக்கர் ஒருவர்தான் இங்கு வாக்குக் கேட்க வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அவர் குடியுரிமையை ரத்துச் செய்திருந்தால் அதற்கான ஆவணத்தைக் காட்ட முடியும்தானே! இறுதியாக வெளியாகிய பட்டியலில் அவரின் பெயர் இல்லை. அப்போது எவ்வாறு குடியுரிமையை துறந்திருக்க முடியும்? குடியுரிமையை ரத்துச் செய்ய அவரால் விண்ணப்பிக்க முடியும். ஆனால், அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டுமே. ஏற்றுக் கொண்டால்தான் அவரின் பெயர் பட்டியலில் வரும். அவருக்கு எதிராக அங்கு பல வழக்குகள் உள்ளன.
கேள்வி: உங்களுடைய வேட்பாளர் எப்படிப்பட்டவராக இருப்பார்?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள். முழு நாடும் எதிர்பார்க்கும் ஒரு வேட்பாளரையே நாம் களமிறக்கவுள்ளோம். சிங்கள பௌத்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் நாட்டின் அனைத்தின மக்களும் எதிர்பார்க்கும் தலைவர் ஒருவர்தான் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
கேள்வி: மலையக மக்களின் வாக்குளை முழுமையாக உங்களால் பெற்றுக் கொள்ள முடியுமா? ஆறுமுகன் தொண்டமான் போன்றோர் தனித்துச் சென்றால் வாக்குகள் சிதறக் கூடுமே?
பதில்: மலையகத்தின் பிரதானக் கட்சிகள் ஒன்றிணைந்துதான் தமிழ் முற்போக்குக் கூட்டணியை அமைத்துள்ளன. அவர்களின் முழுமையான ஆதரவு எமக்குள்ளது. கடந்த முறையும் மலையக மக்கள் எமக்குத்தான் ஆதரவளித்தனர். தெண்டமானும் எம்முடன் வருவதற்கு தயாராகவுள்ளார். கடந்த காலத்தில் என்னுடன் பேச்சுகள் நடத்தியிருந்தார். அங்குள்ள சில பிரச்சினைகள் காரணமாகத்தான் இணைவது கடினமாகவுள்ளது என்றும், எங்களுடன் இணைந்து வாக்குகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் என்னிடம் கூறியிருந்தார்.
கேள்வி: 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்ற தமிழ் மக்களுக்கு கொடுத்த பிரதான வாக்குறுதிகளில் ஒன்றுதான் புதிய அரசியலமைப்பொன்று கொண்டு வரப்படுமென்பது. ஆனால், அந்த விடயம் தோல்வியில்தானே முடிவடைந்துள்ளது?
பதில்: புதிய அரசியலமைப்பொன்றை நாம் கொண்டு வந்துள்ளோம். அதுதான் 19ஆவது திருத்தச் சட்டம். இதற்கு முன்னர் எமது நாட்டில் இருந்த அரசியலமைப்பை விட 19ஆவது திருத்தம் மிகவும் வித்தியாசமானது. ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவராகவுள்ளார். ஜனாதிபதி நீதிமன்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும். தற்போது ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் அடுத்தமுறை இருக்காது. அமைச்சுப் பதவியொன்றைக் கூட அவரால் வகிக்க முடியாது.அமைச்சரவையின் தலைவராக மாத்திரமே ஜனாதிபதியால் இருக்க முடியும். செயலாளர்களை நியமிக்கவும், ஆளுநர்களை நியமிக்கவும், தூதுவர்களை நியமிக்கவும் முடியும். வேறு அதிகாரங்கள் அவருக்கு இருக்காது. அதேபோன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற சுயாதீனம், மக்களுக்கு ஜனநாயகம், தகவல் அறியும் உரிமை என பரந்துபட்ட உரிமைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.ஊடகவியலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார். சிவராம், எக்னெலிகொட போன்றோருக்கு என்ன நடந்தது? கீத் நொயார், உபாலி தென்னக்கோன் போன்றோர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். போத்தல ஜயந்தவின் கால்களை உடைத்தனர். வடக்கில் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர். சிரச, சியத, உதயன் போன்ற ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டின் பின்னர்தான் இவை நிறுத்தப்பட்டன. இதுதான் மாற்றம். அன்று அரசியல்வாதிகளிடம் ஊடகவியலாளர்கள் அடிவாங்கும் நிலையே இருந்தது. ஆனால், இன்று ஊடகவியலாளர்களிடம் அரசியல்வாதிகள் அடிவாங்கும் நிலை உருவாகியுள்ளது.வடக்கைப் பாருங்கள். வடக்கிலிருந்து ஒருவர் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடிய நிலைமை இருந்ததா? அவ்வாறு விமர்சனம் செய்தால் இரவில் வெள்ளை வான் மூலம் அவர்கள் கடத்தப்படுவார்கள். அதுதான் அவர்களது இறுதிப் பயணமாக அமையும். இன்று பாருங்கள். போராட்டம் நடத்துகின்றனர், அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். தெற்கில் உள்ளவர்களை போன்று அவர்களுக்கு பூரண சுதந்திரம் கிடைத்துள்ளது.
கேள்வி: நீங்கள் கூறும் விடயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணிகளாக உள்ள போதும், இன்றும் வடக்கு மக்களின் பிரதானக் கோரிக்கை அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்பதாகத்தான் உள்ளது அல்லவா?
பதில்: அதிகாரத்தைப் பகிர்வதற்கு நாம் எதிர்ப்பு அல்ல. வடக்கில் உள்ள பிரதான பிரச்சினை காணிகளை மீளப் பெற்றுக் கொள்வது, அரசியல் கைதிகளின் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மற்றும் வீடுகள் தொடர்பிலேயே அவர்களுக்கு பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன.அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதேபோன்று அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாம் இன்றும் உறுதியாகத்தான் உள்ளோம்.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழலால் கட்சி இரண்டாக பிளவுபடக் கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்: இல்லை. ஐ.தே.க பிளவடையாது. பிளவுபடுத்தி விட்டு எங்கு செல்ல முடியும்? கோட்டாவுடன் செல்ல முடியுமா? எவர் வெளியில் சென்றாலும் அவரது அரசியல் பயணம் அன்றுடன் இறுதியடையும்.
கேள்வி: மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றின் கருத்தைக் கோரியுள்ளார். அதன் தீர்ப்பும் வெளியாகவுள்ளது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: அவை ஜனாதிபதிக்கு திடீரென தோன்றும் எண்ணங்கள். இரவுநேர கனவில் நினைப்பதை காலையில் செய்கிறார். அதனை எவரும் பொருட்படுத்துவதில்லை. ஜனாதிபதி எடுத்த எந்தவொரு தீர்மானமும் வெற்றியடையவில்லை. அன்று அவரின் வெற்றிக்காக தீர்மானம் எடுத்ததும் நாம்தான். அவர் ஒன்றும் செய்யவில்லை. அன்று அவர் தீர்மானம் ஏதும் எடுத்திருந்தால் தோல்விதான் கிடைத்திருக்கும். உயர்நீதிமன்றத்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைக்கும். எல்லை நிர்ணய பிரச்சினைதான் அங்குள்ளது. எந்த முறையில் தேர்தலை வைத்தாலும், அதனை பாராளுமன்றத்தில்தான் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி: புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: சவேந்திர சில்வா, இறுதி யுத்தத்தின் போது ஒரு முன்னணியின் வெற்றிக்கான இராணுவத் தளபதிகளில் ஒருவராகவே செயற்பட்டார். தீவிரவாதத்துடன் போராடியதை தவறெனக் கூற முடியாது. அது சரியானது. ஆனால், அங்கு மனிதவுரிமைகள் மீறப்பட்டிருந்தால் அல்லது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தால் அவை தவறானவை. யுத்தத்தின் போது இறந்தவர்கள் பற்றி கூற முடியாது. புலிகளால் எமது மக்களும் இராணுவத்தால் புலிகளும் பலியாகினர். அதுதான் யுத்தம். மக்கள் இறப்பதால்தானே யுத்தத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். யுத்தமொன்றில் அவை நடைபெறும்.ஆனால், யுத்தத்திற்கு அப்பால் சில தேவைகளுக்காக மக்களை கொன்று குவித்திருந்தால் அது யுத்தக் குற்றம். அவ்வாறு குற்றச்சாட்டுகள் இருந்தால் அதற்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். அனைத்து இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களுடன் தொடர்புபடுத்த முடியாது. அன்று இடம்பெற்றிருந்த சில மனிதப் படுகொலைகளுக்கு இராணுவத்தில் இருக்கும் ஒரு தரப்பு இன்றும் எதிர்ப்பை வெளியிடுகிறது. கோட்டாபய செய்தமைக்கு எதிராக அன்றுமுதல் பேச வருபர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா. ஆகவே, அனைத்து இராணுவத்தினரையும் குற்றச்சாட்டுக்குள் கொண்டு வரக் கூடாது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்