ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், இந்திய அரசை கண்டித்தும் ஒரு மணி நேரம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த பாகிஸ்தான் மக்களுக்கு, பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப்பெற்றது. மாநிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது.
மேலும், இந்தியாவின் செயல் குறித்து சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான் அரசு முறையிட்டபோதும், எதிர்பார்த்த ஆதரவு உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கவி்ல்லை. வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப மனு அளித்துள்ளது பாகிஸ்தான்.
இதுமட்டுமல்லாமல் இந்திய எல்லையில் அத்துமீறி இந்திய வீரர்கள் மீது துப்பாக்கியால் சுடுவது, எல்லைப்பகுதிகளில் படைகளைக் குவித்தல், போர்விமானங்களை நிறுத்துதல் என பதற்றமான சூழலை உருவாக்கி வருகிறது.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்காக பாகிஸ்தான் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மக்களுக்காக இன்று நாடுமுழுவதும் உள்ள மக்கள் 30 நிமிடங்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.