சஜித் தரப்பு எம்.பிக்கள் மங்கள இல்லத்தில் இரகசிய சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு எம்.பிக்களின் முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் இரவு அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 40ஐ.தே.க எம்.பிக்கள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.

இச் சந்திப்பு இரவு 7மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வழிவகைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. இன்னும் ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அத்தோடு தேர்தல் பணிகளில் முழுமையாக இறங்க இருக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க விருப்பம் தெரிவிக்கும் நிலை எதிர்வரும் தினங்களில் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறுகையில், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு தெளிவாக கோரியிருக்கிறோம். பிரதமர் சரியான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். இன்றைய சந்திப்பில் 35- – 40எம்.பிகள் கலந்து கொண்டார்கள் என்றார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகையில், ஒன்றாக அமர்ந்து இராப்போசணம் அருந்தினோம்.ஒன்றாக கூடி பேசினோம் என்றார்.

அமைச்சர் ஹர்ச டி சில்வா கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சாத்தியமான முடிவொன்று எட்டப்படும்.சிறந்த முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார். நவம்பர் இறுதியில் நாட்டின் ஜனாதிபதியாக அவர் தான் தெரிவாகுவார் என்றார்.

Related posts