தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஷன் மங்கள்’ படம், ஒரே வாரத்தில் நூறு கோடியை குவித்த சந்தோஷத்தில் இருக்கிறார், வித்யா பாலன்.
தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஷன் மங்கள்’ படம், ஒரே வாரத்தில் நூறு கோடியை குவித்த சந்தோஷத்தில் இருக்கிறார், வித்யா பாலன். அந்த மகிழ்ச்சியுடன் அவர் அளித்த பேட்டி:
‘மிஷன் மங்கள்’ படத்தில் தாரா ஷிண்டேவாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
‘மிஷன் மார்ஸ்’ திட்ட இயக்குநர் தாரா ஷிண்டேவாக நடித்தேன். அவர் இந்தியாவில் பணிபுரியும் எல்லா பெண்களையும் போன்றவர்தான். அதாவது, ஒரே நேரத்தில் வீட்டையும், அலுவலகப் பணியையும் நிர்வகிப்பவர். அவருடைய வேலைதான் அவரது அடையாளம். அதுவே தாராவுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். வேலையில் மிகவும் கவனமாக இருக்கும் தாரா, அதே அளவு பொறுப்புடன் வீட்டையும் கவனித்துக்கொள் கிறார். அப்படி அவர் இரண்டையும் கையாளும் விஷயம் எனக்குப் பிடித்தது. என்னைச் சுற்றி அப்படிப்பட்ட பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நான் அந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுமே ‘சூப்பர் உமன்’ ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சற்று இடைவெளிக்குப் பின்தானே நீங்கள் ‘மிஷன் மங்கள்’ படத்தில் நடித்தீர்கள்?
நான் இந்தியில், கஹானி 2, பேகம் ஜான், துமாரி சுலு என்று அடுத்தடுத்து 3 படங்களில் நடித்தேன். வேறு சில படங்களின் கரு எனக்குப் பிடித்திருந்த போதிலும், அவற்றுக்கான முழுக்கதையும் தயாராகி இருக்கவில்லை. இந்நிலையில், ‘மிஷன் மங்கள்’ படக் கதையை இயக்குநர் பால்கி என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டதுமே எனக்குப் பிடித்துப்போனது. எனவே அப்படத்தில் நடித்தேன். தற்போது, மற்ற படங்களின் நிலையும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இவற்றுக்கு இடையில், நான் நிறைய விளம்பரப் படங்களில் நடித்தேன். தொடர்ந்து பயணம் மேற்கொண்டேன். குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட்டேன். இவையெல்லாம் எனக்குத் தேவையாக இருந்தன. என்னால் ஓய்வின்றி தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க முடியாது.
உங்கள் செயல்பாடுகளையே நீங்கள் அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்வதுண்டா?
அப்படி சொல்வதற்கில்லை. ஆனால் நான் ஒரு சிந்தனையாளர். நிறைய சிந்திக்கிறேன். கடற்கரையில் பொழுதைக் கழிப்பது மிகவும் பிடிக்கும். மணிக்கணக்கில் அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நானே மறந்துவிடுவேன். நான் எதையும் ரொம்ப திட்டமிட்டு செய்வதில்லை. ஒவ்வொரு நாளையும் அதன் போக்கில் எதிர்கொள்கிறேன். திரைப்படங்களைக் கூட முன்கூட்டியே நான் ஒத்துக்கொள்வதில்லை. ஏன்என்றால் இடைப்பட்ட காலகட்டத்திற்குள் எத்தனையோ மாற்றங்கள் உருவாகிவிடும். அதற்கேற்ப நாமும் மாறிவிடுவோம். ஒவ்வொரு விஷயத்திலும் நமது கருத்தும் மாறிவிடும். கடந்த காலத்தில் நான் அப்படி நிறைய மாற்றங்களை சந்தித்திருக்கிறேன். ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் கொடுத்தேன். ஆனால் அந்தப் படத்தில் நடிக்காமலே விலகிவிட்டேன். அதற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, அதன் கதையில் எனக்கு ஈடுபாடில்லாமல் போய்விட்டது. இப்படி நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம்.
நடுத்தர வயது கதாநாயகிகளுக்குரிய கதைகள் உருவாகுவதில்லையே. நடிகை நீனா குப்தாகூட இதுகுறித்து தனது விமர் சனங்களை பதிவுசெய்திருக்கிறாரே?
எனக்கு 40 வயது. இப்போதும் என்னை மையமாக வைத்துக் கதைகள் எழுதப்படுகின்றன. கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சகுந்தலா தேவி பாத்திரம், வெப் சீரிஸ் ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாத்திரம் ஆகியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. நீனா குப்தாவும் கூட தற்போது சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் பிரதான பாத்திரத்தில் தோன்றுகிறார். நாற்பது வயதைக் கடந்துவிட்டால் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பெண்கள் கருதியது எல்லாம் பழைய காலம். பெண்களாகிய நாம், எந்த வயதைக் கடந்தாலும், விரும்பினால், விரும்பிய விதத்தில் வாழலாம்.
சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் அனுபவம்..?
அது அற்புதமான அனுபவம். மனிதக் கணினி என்று அறியப்பட்ட பெண்ணாக நடிப்பது மிகவும் சுவாரசியம். சகுந்தலா தேவியின் கணிதத் திறமைகொண்ட ஒரு முகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவருக்கு இன்னொரு வினோதமான மறுபக்கம் இருக்கிறது. அதுவே அந்தக் கதாபாத்திரத்தை சுவையானதாக ஆக்குகிறது.
‘நட்கத்’ என்ற குறும்படத்தைத் தயாரித்ததன் மூலம் நீங்களும் உங்கள் கணவர் சித்தார்த் ராய் போல தயாரிப்பாளர் ஆகியிருக்கிறீர்களே?
உண்மையில் எனக்கு படத் தயாரிப்பில் ஆர்வமில்லை. ஆனால் அந்தக் குறும்படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதன் அசல் தயாரிப்பாளரான ரோனி ஸ்குரூவாலா, ‘இது ஒரு சிறிய படம். இதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம், உங்களுக்குச் சம்பளம் கொடுக்க எங்களுக்குக் கட்டுப்படி ஆகாது’ என்றார். பரவாயில்லை, எனக்குச் சம்பளம் வேண்டாம் என்றேன் நான். ‘அப்படியானால், தயாரிப்பாளர் என்று உங்கள் பெயரை போட்டுக்கொள்ளட்டுமா?’ என்றார் அவர். ‘சரி’ என்றேன் நான். அப்படித்தான் அது நடந்தது. ஒரு தாய்-மகன் குறித்த அழகான கதை, நட்கத். வளர்க்கப்படும் விதம், ஒரு குழந்தையின் நடத்தையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அக்கதை பேசுகிறது. பாலின சமத்துவத்தை நெறிப்படுத்த ஆண் குழந்தை வளர்க்கப்படும் விதம் முக்கியமானது.
திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு இடையிலான சம்பள ஏற்றத்தாழ்வு குறித்து?
எனக்கு கொடுக்கப்படும் சம்பளம் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. நடிகர்களின் படங்களுக்கான பட்ஜெட்டுடன் அவர்களின் சம்பளத்தை ஒப்பிட்டால், எனது படங்களுக்கான பட்ஜெட்டும் எனது சம்பளமும் சரியானதே!