ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை தவிர்க்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.
அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்த்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை காணப்படுவதால் இதனை சமரசமாக தீர்த்துக் கொள்ளும் பொருட்டு பிரதமருடன் கலந்துரையாட பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற கூட்டமொன்றின் போது தீர்மானித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை கட்சியின் முக்கியமான பலரும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியதையடுத்தே சஜித் பிரேமதாஸ இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது ஜனநாயக தேசியக் கூட்டணியை வெற்றி கொள்ளச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இவ்விவகாரத்தை சமரசமாக தீர்த்துக் கொள்ளும் வகையில் பிரதமருடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பேச்சுகளின் போது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்கக் கூடிய வகையில் அவசியமான யாப்புத் திருத்தமொன்றைக் கொண்டு வருவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பூரண அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரதமருக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனினும் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற இறுக்கமான பிடியிலேயே சஜித் தரப்பு இருப்பதாகவும் அறிய வருகிறது. இதில் விட்டுக் கொடுப்புக்கு இடம் கிடையாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் திங்கட்கிழமை (02) மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதால் நாடு திரும்பியதன் பின்னர் நேரம் ஒதுக்கித் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மாலைதீவு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன் தாமதமின்றி அவசரமாக ஜனநாயக தேசியக் கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், அன்றைய தினமே கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரம் தெரிவித்தது.
நேற்று முன்தினமிரவு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடன் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
இது இவ்விதமிருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலருடன் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரியவருகின்றது.
எம்.ஏ.எம். நிலாம்