இணைய சேவையை தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தடுக்க முடியும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமே துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை இல்லை.
இது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் பல கவலை தெரிவித்து வருகின்றன. அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவர் ஃபெடெரிக்கா மோகெரினி கூறும்போது, இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெல்ஜியம் நாட்டின் அரசியல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “தீவிரவாதிகளுக்கு இடையேயான தொடர்பை துண்டிக்க வேண்டுமானால் தொலைதொடர்பு உபகரணங்களை முடக்குவதே முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். இதில் காஷ்மீர் மக்கள் பாதிக்காமல் தீவிரவாதிகளின் தொலைதொடர்பை மட்டுமே துண்டிப்பது சாத்தியமற்றது. அப்படி செய்ய ஏதேனும் வழி இருந்தால் அதை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சியடைவேன்.
இருப்பினும் இன்னும் சில நாட்களில் காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலுமாகத் திரும்பும். காவலர்கள் தத்தம் வழக்கமான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுடன் மத்திய கூடுதல் படைகளும் குறைக்கப்படும். அவர்களுக்கு வேறு அலுவல்கள் காத்திருக்கின்றன.
அதேவேளையில் பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து தீவிரவாத இயக்கங்கள் செயல்படுவதைத் தடுக்காதவரை அமைதி பேசுசுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.
அதேபோல் ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னால் இந்து தேசியவாதக் கொள்கை இருப்பதாகக் கூறுவது இந்தியாவைப் பற்றிய புரிதல் இல்லாததன் விளைவு” எனக் கூறியிருக்கிறார்.
ஜம்மு, லடாக் பகுதிகளில் அனைத்து தரைவழி தொலைதொடர்பு சேவைகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனர். ஜம்முவில் 10 மாவட்டங்களில் மொபைல் ஃபோன் சேவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஹண்ட்வாரா, குப்வாரா வருவாய் மாவட்டங்களும் அடங்கும்.