மிக பிரமாண்டமாய் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் புத்தகத்திருவிழாவின் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது.
வட மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது.
இறுதி நாளான நேற்று ஓவியப்போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் அதிஸ்டப்பெட்டியில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 20 வெற்றியாளர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் பரிசில்களை வழங்கியதுடன், புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்ட புத்தக விற்பனையாளர்களுடனும் அங்கு வருகை தந்த மக்களுடனும் ஆளுநர் அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.
மேலும் அதிகளவிலான மக்கள் ஆர்வத்துடன் இந்த புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டமையினால் அடுத்த வருடமும் இந்த புத்தகத்திருவிழாவினை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடத்தவுள்ளதாக ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
30 தொகுதிகளாக பிரிக்கப்பட்ட புத்தக கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள் , வழிகாட்டி நூல்கள் , ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.