களனி ரஜமகா விகாரை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியை ஐ.தே.க நிராகரித்துள்ளது.
களனி ரஜமகாவிகாரை விகாராதிபதிக்கு எதிரான சொத்து மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முடிவொன்று கிடைக்கும் வரை நம்பிக்கையாளர் சபை தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருப்பதாக பிரதமர் முன்கூட்டி அறிவித்திருந்ததாகவும் ஐ.தே.க தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தக் கட்சி, களனி ரஜமகா விகாரை விகாராதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்பை நம்பிக்கையாளர் சபை தலைவருக்கு ஏற்கமுடியாது. இந்த நிலையிலே அவர் இந்தப் பொறுப்பில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கையாளர் சபை கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை எனவும் சிறு குழுவொன்று எடுத்த முடிவு தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் ஜ.தே.க குறிப்பிட்டுள்ளது.
விகாராதிபதிக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் நிரபராதியாக அறிவிக்கப்படுவது பிரதானமானது எனவும் பிரதமர் ஆரம்ப முதலே கூறிவந்ததாகவும் ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது.
களனி ரஜமகா விகாரை நம்பிக்கையாளர் சபை தலைவர் பதவியில் இருந்து பிரதமரை நீக்க நம்பிக்கையாளர் சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.இது தொடர்பிலே ஐ.தேக. தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது