இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் அண்மையில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டை அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவருடன் நடந்து சென்றார்.
அமெரிக்காவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலர் பால்மோரல் கோட்டை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இங்கிலாந்து ராணியை இதற்கு முன் பார்த்தது இல்லை.
இதனால் அவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணி 2-ம் எலிசபெத்திடம் சகஜமாக பேச தொடங்கினர். அப்போது அவர்கள் “இங்கிலாந்து ராணி அருகில் தான் வசிக்கிறாரா? அவரை நீங்கள் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா?” என ராணியிடமே கேட்டனர்.
இதைக்கேட்டு ராணி 2-ம் எலிசபெத் சிரிக்கவோ அல்லது கோபம் அடையவோ இல்லை. மிகவும் சகஜமாக “ஆம் அவர்(ராணி) இங்கு தான் வசிக்கிறார். ஆனால் நான் அவரை பார்த்தது இல்லை. இந்த போலீஸ்காரர் பார்த்து இருக்கிறார்” என கூறி தன்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரியை கைகாட்டிவிட்டு நடைபயிற்சியை தொடர்ந்தார்.