சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் தெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
நிஜத்தில் இருப்பதுபோல் இந்த சிலைகளை வடிவமைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகள் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 கலைஞர்கள் 5 மாதங்களாக சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது பணிகள் நிறைவடைந்து ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அங்கு நிறுவி உள்ளனர். அதை பார்த்தவர்கள் அச்சு அசல் ஸ்ரீதேவி போல இருப்பதாக பாராட்டுகிறார்கள். மெழுகு சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போனிகபூர் கூறும்போது, “மறைவுக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார். இந்திய பட உலகில் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார்.