முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
இராணுவ நிலைகளை அதிகரித்தல் அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் விரிவாக்கத்தை நிலைநிறுத்த ஏதாவது கிராமங்களில் ஒரு சிங்களரோ அல்லது பௌத்த விகாரையோ இருப்பின் அதனை தமிழ்ச் சிங்கள கிராமங்கள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஆதிக்கச் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய இந்நிலைமைகள் தமிழ்மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்த காலத்தைவிடவும், அதற்கான தேவையையும், பரப்பையும், நியாயத்தையும் மிகப் பெரிதாக்கியுள்ளன.
இன்று தமிழ் மக்கள் எதிரியின் காலடியில் சிக்குண்டு கிடக்கின்றனர். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் தாமாகவே தம் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தாமே தலைமையேற்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இம் மக்கள் போராட்டங்களை மேலும் வலுப்படுத்தவேண்டியது ஒரு மக்கள் இயக்கத்தின் கடப்பாடாகக் காண்கிறோம்.
இந்நிலையில் தமிழ்த் தேசிய அரசியற் பிரச்சினை, தொடரும் ஆக்கரமிப்பை எதிர்கொள்ளல், மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சினைகள் மற்றும் நிலைமாறுகால நீதி போன்றவற்றை கொள்கைகளை முன்னிறுத்தியும், ஐக்கியத்துடனும் வலுவான மக்கள் பலத்துடன் கையாளவும் எதிர்கொள்ளவும் வேண்டியுள்ளது. அவ்வாறான பலமான மக்கள் இயக்கதத்தின் தேவையை வரலாறு மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றது.
இவற்றை முன்னிறுத்தியே எழுக தமிழ் – 2019 தமிழ் மக்கள் பேரவையினால் திட்டமிடப்பட்டு பரப்புரைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் தொழில்சார் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், சமூக அபிவிருத்தி அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் போன்றவற்றையும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோரையும் சந்தித்து வருகின்றோம்.
மக்களுடனான இச் சந்திப்புக்களில் விரிவான உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் பரவலாக எழுக தமிழுக்கான வரவேற்பும், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பேரவையை வலுவான மக்கள் இயக்கமாக உருவாக்குவதில் தமது ஈடுபாடுகளையும் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது எமக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது.
இது வரையில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எழுக தமிழுக்கான எமது செயற்பாடுகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன. முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவையே இன்று வரையான எழுக தமிழ் தொடர்பான எமது செயற்பாடுகளாக அமைகின்றன. தொடர்ந்தும் உங்களைச சந்தித்து எமது செயற்பாடுகள் பற்றிய முன்னேற்றங்களை அறியத் தருவோம்.