ஆந்திரவைச் சேர்ந்த 74 வயது பாட்டி, உலகின் மிக வயதான பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்து உள்ளார்.
74 வயதில் ஒரு பெண் தாயாக முடியுமா? என்றால் ஆந்திராவில் குண்டூரில் உள்ள மருத்துவர்கள் ஆம் என்று ஒரு உறுதியான பதில் கூறி உள்ளனர். 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற பெண் சிசேரியன் (சி-பிரிவு) அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
இதற்கு முன் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள தல்ஜீந்தர் கவுர், 2017-ம் ஆண்டில், தனது 72-வது வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
எர்ராமட்டி குழந்தையை வெற்றிகரமாக பிரசவித்ததால், அவர் 74 வயதில் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிக வயதான பெண்மணி ஆகி உள்ளார்.
உண்மையில், இன் விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) போன்ற ‘உதவி இனப்பெருக்க’ மருத்துவ தொழில் நுட்பங்களின் முன்னேற்றம் காரணமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பம் தரிப்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ஐ.சி.எஸ்.ஐ), கிரையோபிரசர்வேஷன் அல்லது மேம்பட்ட கருவுறுதல் தொழில் நுட்பமும் காரணமாக உள்ளது.
கர்ப்பம் காரணமாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல்நல அபாய விளைவு என்பது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகரிக்கிறது. ஒரு பெண் மாதவிடாய் நின்றால் இயற்கையான கருவுறுதல் நின்றுவிடும்.
ஐ.வி.எஃப் போன்ற நுட்பங்கள் இயற்கையான மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகும் பெண்கள் கர்ப்பமாக இருக்க உதவுகின்றன. எர்ராமட்டி மங்கம்மாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று வரலாறு படைக்கப்பட்டது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா 1962 மார்ச் 22 அன்று எர்ராமட்டி ராஜா ராவ் (இப்போது 80) என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க அவர்கள் பல மருத்துவமனைகளுக்குச் சென்றார்கள் ஆனால் நடக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் (2018) அவர்கள் குண்டூரில் உள்ள அஹல்யா நர்சிங் ஹோமுக்கு வந்தனர். அங்குள்ள டாக்டர் ஷானக்கயலா உமாஷங்கர் இந்த சவாலான சாதனையை நிகழ்த்திக் காட்டி உள்ளார்.
இது குறித்து டாக்டர் உமா ஷங்கர் கூறியதாவது:-
இந்த பெண்மணிக்கு பிபி, சர்க்கரை போன்ற நோய்கள் இல்லை மற்றும் மரபணு முறை மிகவும் நல்லதாக இருந்தது. இருதயநோய் மருத்துவர்கள், நுரையீரல் நிபுணர்கள் மற்றும் பிற சிறப்பு மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான பரிசோதனைக்கு பின்னர் நாங்கள் அவர் குழந்தை பெற முடியும் என முடிவு செய்தோம். அவர் மாதவிடாய் நிறுத்த நிலையை அடைந்தார். ஆனால் ஐவிஎஃப் மூலம் ஒரு மாதத்திற்குள் அதனையும் திரும்பப் பெற்றோம், என்று கூறினார்.
இது குறித்து பாட்டியின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் கூறியதாவது:-
எங்களுக்கு ஒரு குழந்தை இல்லாததால் எங்கள் கிராமத்தில் நாங்கள் நிறைய சமூக குற்றச்சாட்டை எதிர்கொண்டோம். எங்கள் திருமணத்திற்குப் பிறகு எங்களால் அவதூறுகளைத் தாங்க முடியவில்லை, எனவே நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் இப்போது கடவுள் எங்களை ஆசீர்வதித்து உள்ளார் என்று நம்புகிறோம் என கூறினார்.