அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வாக்களிக்க போவதாக 52 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.
அந்நாட்டு சட்டப்படி அதிபராக பதவி வகிக்கும் ஒருவர் மீண்டும் ஒருமுறை மட்டுமே போட்டியிட முடியும். மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
அதேசமயம் ஜனநாயக கட்சியின் சார்பில் யார் வேட்பாளர் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் தொடர்பாக ராஸ்மூசன் நிறுவனம் அண்மையில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், 52 சதவீதம் பேர் ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் 42 சதவீதம் பேர் மீண்டும் ட்ரம்புக்கே வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளனர்.
அதேசமயம் 6 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்கை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யவில்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.