மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பதாக தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதன்படி ‘வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை நாங்கள் மீட்டெடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பிரசாரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், மோசமானதொரு நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இனியும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது.
இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. எனவே அதனை மையப்படுத்தி நாம் எமது பிரசாரத்தை முன்னெடுக்கவிருக்கிறோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.