தமிழர்களாகிய எமது சொத்துக்களை அழித்த ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியே தற்போது அதனை மீள எமக்கு கட்டித் தருகின்றது. இந்த சம்பவம் முழு நாட்டு மக்களுக்கு ஆழமான கருத்துக்களை கூறுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாது நாம் அழித்தவற்றை நாமே தங்களின் கைகளினால் கட்டிக் கொடுக்கின்றோம் என்பதை எடுத்துக் கூறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ் மாநகர சபை மைதானதில் இன்று முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பொது நூலகம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதே சில நொடியில் எரித்தளிக்கப்பட்டது. நாட்டின் தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க அன்று அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் இரு நபர்கள் இந்த நாசகார வேலையை செய்திருந்தார்கள்.
ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் நகர மண்டபம் அவ்வாறு அளிக்கப்படவில்லை. யாழ் கோட்டை தொடக்கம் மாநகர மண்டப கட்டிடம் வரை இராணுவத்தின குண்டுத்தாக்குதல்களினால் சிதைத்து உடைக்கப்பட்டது. இதனை நான் இப்போது கூறுவதன் நோக்கம் என்னவென்றால் யாரால் அழிக்கப்பட்டதோ அவர்களினாலேயே மீள கட்டியமைக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் எமது மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்கும் பல ஆழமான கருத்துக்களை கூறுகின்றது.
அதாவது இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாது நாம் அழித்தவற்றை நாமே தங்களின் கைகளினால் கட்டிக் கொடுக்கின்றோம் என்பதை எடுத்துக் கூறுகின்றது.
இது மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமனால் அரசியல் ரீதியாகவும் ஸ்திரதன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே பௌதிக அபிவிருத்திகள் இதனை முழுமைப்படுத்தாது.
எனவே அரசியல் ரீதியான தீர்வுக்கு பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
ஆனால் அவை இறுதி செய்யப்படாமல் உள்ளது.எனவே அரசியல் தீர்வு கைவிடப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் படையினராலேயே நாம் கொன்று குவிக்கப்படாமல் இருப்பதுடன் எமது சொத்துக்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்து இந்த நாட்டின் மக்களாக எமது உரிமைகளுடன் நாம் வாழ வேண்டும்.என்றார்.
(யாழ். நிருபர் பிரதீபன்)