நன்றி : கா.இசக்கிமுத்து
மூன்றாம் முறையாக சூர்யாவுடன் இணைந்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மோகன்லால், ஆர்யா என்று ‘மல்டி ஸ்டாரர்’ வண்ணத்தில் ‘காப்பான்’ படத்தை முடித்து வெளியீட்டுக்கும் தயாராகிவிட்டார். அவருடன் உரையாடியதிலிருந்து …
‘காப்பான்’ படத்தின் கதையை எதன் அடிப்படையில் எழுதினீர்கள்?
எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் கடந்த இருபது ஆண்டுகளாக எனது நண்பர்கள். சுபாவுடன் இணைந்து திரைக்கதை அமைத்து படங்களை இயக்கி வந்தேன். ‘நாமும் சேர்ந்து பணிபுரிவோம்’ என்று பட்டுக்கோட்டை பிரபாகர் கேட்டுக்கொன்டே இருந்தார். அப்படித் தான் 2011-ல் நாங்கள் இணைந்து வேலை செய்யத் தொடங்கினோம். ‘எஸ்.பி.ஜி’ (Special Protection Group) என்ற ஒரு குழு இருக்கிறது.
பிரதமர், முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்புக்குப் பணிபுரியும் கமாண்டோக்கள் உள்ள பிரிவு. அவர்கள் தருவது ஏழு அடுக்குப் பாதுகாப்பு முறை. அதை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்றேன். ‘அதைப் பற்றி முதலில் நான் படிக்கிறேன்’ என்று சொன்னார். பின்னர், தேவையான அளவுக்குப் படித்துவிட்டு 2012-ல் எழுதிய கதைதான் ‘காப்பான்’.
சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல் என ‘மல்டி ஸ்டாரர்’ பட அனுபவம் எப்படியிருந்தது?
நாம் அவர்களுக்குச் சரியான மரியாதை கொடுத்தோம் என்றால், அவர்களும் நமக்குக் கொடுப்பார்கள். அனைவருமே தனிப்பட்ட நபருக்காக அல்லாமல், கதைக்காகப் பணிபுரிந்தார்கள். இந்தியப் பிரதமராக மோகன்லால் நடித்துள்ளார். நல்லவர், கெட்டவர் என்பதைத் தாண்டி அந்தப் பதவிக்கு ஒரு அந்தஸ்து இருக்கிறது. இப்படியொரு கேரக்டரைப் பற்றி மோகன்லாலிடம் சொன்னேன். உடனே ‘சரி’ என்று சொன்னார்.
உங்களுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் இது. உங்களுக்கும் அவருக்குமான புரிதல் எப்படி இருக்கிறது?
‘நேருக்கு நேர்’ படத்துக்காக நான் தான் அவருக்கு ‘மேக்கப் டெஸ்ட்’ செய்தேன். நடிப்புக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதவர் மாதிரி இருந்தார். மிகவும் மரியாதையான மனிதர். அப்போது முதல் அவர் எனக்குப் பழக்கம். சூர்யாவிடம் பிடித்த விஷயம் என்றால், உண்மையாக உழைக்கக்கூடிய கலைஞன்.
‘நேருக்கு நேர்’ படப்பிடிப்பின்போது என்ன மரியாதை கொடுத்தாரோ, அதையே தான் இப்போதும் கொடுக்கிறார். அவர் மாறவே இல்லை.
படத்தில் அரசியல் உள்ளதா?
இல்லை. இன்றைக்கு நடக்கும் சில சமூகப் பார்வைகள், பிரச்சினைகள் இருக்கும். அதெல்லாம் தாண்டி பிரதமர் உயிரை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் முக்கியமான விஷயமாக இருக்கும். இந்தப் படத்தில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று ஊகிக்க முடியாத அளவுக்குத் தான் இதன் திரைக்கதை பண்ணியிருக்கிறேன்.
உங்களது முதல் படத்துக்கு ஒளிப்பதிவுக்காகத் தேசிய விருது பெற்றீர்கள். இயக்கத்துக்காகத் தேசிய விருது பெறும் எண்ணம் இருக்கிறதா?
எனது படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் வேண்டுமானால் தேசிய விருது வாங்குவார்கள். இயக்கத்துக்காக வாங்குவேனா என்றால் தெரியாது. என்னைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் லாபம் பார்த்தாரா, இல்லையா என்பது தான் முக்கியம். கதையில் ஒரு யதார்த்தத்தை வைத்துக் கொண்டு, பாடல்கள்,
சண்டைகள் எனச் சேர்த்து கமர்ஷியலாக பண்ணுவது தான் எனது பாணி.
தமிழ் சினிமாவில் சமீபத்திய போக்கு எப்படி இருக்கிறது?
சில இயக்குநர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை, சிறந்த தொழில்நுட்பத்தில் சொல்லக் கூடிய நிறையப் பேர் வந்துவிட்டார்கள். போட்டி கடுமையாக இருக்கிறது. அமேசான், நெட் பிளிக்ஸ் எனத் திரையரங்குக்குப் போட்டியாக இணையம் வந்துவிட்டது. பத்து நாளில் ஒரு படம் பார்க்கவில்லை என்றால், இன்னும் பத்து நாளில் எப்படியும் அமேசானில் வந்துவிடும் காத்திருக்கலாம் என்ற மனநிலை மக்களிடையே வந்துவிட்டது. எவ்வளவு பெரிய பட்ஜெட் படம் எடுத்தாலும், பெரிதாக விளம்பரப்படுத்த வேண்டியதுள்ளது.
ட்வீட்டரில் பலரும் பாராட்டிவிட்டார்கள், படம் சூப்பர் ஹிட் என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை. சமூக வலைதளத்தைப் பார்ப்பவர்கள் சுமார் 10 சதவீதம் இருக்கலாம். அவர்களைத் தாண்டி படம் செல்ல வேண்டும் என்றால், ஏதேனும் புதிதாக ஒரு விஷயம் பண்ண வேண்டியதிருக்கிறது. இன்று ஃபேஸ்புக், ட்வீட்டர் தாண்டி பலருமே வாட்ஸ்-அப் வைத்திருக்கிறார்கள். அதில் படம் ‘சூப்பர்டா’ என்று ‘டாக்’ பரவுவது மாதிரி படம் பண்ண வேண்டும். அது தான் இன்று பவர்ஃபுல் மீடியம் என நினைக்கிறேன்.
‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது என வழக்குத் தொடுத்திருக்கிறார்களே..?
படத்தின் டீஸர் முன்னோட்டத்தில் ‘இயற்கையாக உருவாகும் நதிநீரை தனக்கு எனச் சொந்தம் கொண்டாடும் உரிமை யாருக்குமில்லை’ என்ற வசனம் வருகிறது. நதி நீர்ப் பங்கீட்டை வைத்துக் கதை வைத்திருக்கும் ஒருவர், அந்தக் கதையை 2017-ல் அதைப் பதிவும் பண்ணியிருக்கிறார். இந்த வசனத்தை வைத்து, இது என் கதை என்று வழக்குப் போட்டிருக்கிறார். அவரை 2017-ம் ஆண்டு ஜனவரியில் நான் சந்தித்தேன் என்றும் சொல்லியிருக்கிறார் ‘மூலக்கதை என்று டைட்டிலில் என் பெயர் போட்டு, 10 லட்சம் கொடுக்க வேண்டும்’ என வழக்குப் போட்டிருக்கிறார். எப்போது, எங்கே சந்தித்தோம் என்று கேட்டிருக்கிறேன். பெரிய படங்கள் என்றாலே பலர் இது மாதிரி கிளம்பிவிடுகிறார்கள். இம்மாதிரியான கேள்விகளைப் பலரும் கேட்பதால் இந்த வழக்கில் ஜெயித்தவுடன், பெரிய அளவில் மானநஷ்ட வழக்குப் போடுவேன்.
ரஜினி, விஜய், அஜித் படங்களை கே.வி.ஆனந்த் எப்போது இயக்குவார்?
அனைத்தையுமே கதை தான் தீர்மானிக்கும். ‘நாம இணைந்து பணிபுரிய வேண்டும்’ என்று சகோதரர் விஜயும் கேட்டிருக்கிறார். நானும் கண்டிப்பாக என்று சொல்லியிருக்கிறேன். அஜித்தும் அவர் விளம்பரங்களில் நடித்த காலத்திலிருந்து எனக்குப் பழக்கம். எனக்குத் திருப்தியாக ஒரு கதை தயாரானால் மட்டும் நாயகனைச் சந்திக்கும் பழக்கமுடையவன் நான்