தமிழ் மக்கள் என்ன தீர்வினை விரும்புகின்றார்கள் என்பதை கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி, சுய கௌரவத்துடன், சுயநிர்ணய உரிமை பெற்று வாழக்கூடிய நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்கினேஸ்வரன் அரசிடம் வேண்டுகோள்விடுத்தார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “எழுக தமிழ்” பேரணியின் நிறைவில், யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற எழுச்சி உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்கும் எமது பிரதேசங்களை நாமே அபிவிருத்தி செய்யும் எமது பாதுகாப்பை நாமே உறுதி செய்யும் அதிகாரம் அற்ற எமது நிலைமையைப் பயன்படுத்தி எமது இனத்தை இன அழிப்புக்கு உட்படுத்தி வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் தேசியத்தை அழிக்கும் பல்வேறுபட்ட உபாயங்களை சட்டங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக இன அழிப்பை மேற்கொண்டார்கள்.
இன அழிப்பு என்பது வெறும் கொல்லுதலைக் குறிக்கமாட்டாது. உடல் மனோரீதியான பாதிப்பு, பௌதீக அழிப்பு, இனப் பெருக்க ஆற்றலை பலாத்காரமாக நீக்குதல், குழந்தைகளைப் பலாத்காரமாக தமது குடும்பங்களில் இருந்து மாற்றுதல் போன்றவையும் இன அழிப்பே ஆகும்.
1948 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் பெரும் அளவிலான பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் குடிசன பரம்பலில் திட்டமிட்ட மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவிட்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எமது பாரம்பரிய வரலாற்று, தொல்லியல், கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான எமது மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். எமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தலையீடுகளாலோ, சமரச முயற்சிகளாலோ மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. இலங்கை சர்வதேச ரீதியான ஒரு பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
வடக்கு, கிழக்கில் எமது இனத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம், வன ஜீவராசிகள் திணைக்களம், வீடமைப்பு அதிகார சபை, மகாவலி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் ஆகியன தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நுட்பமான முறையில் எமக்கெதிராக செயற்பட்டு வருகின்றன.
இந்த அநியாயங்களையும், அடக்குமுறைகளையும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டு வரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து, விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுகின்றோம். தமது உரிமைகளை வலியுறுத்தி எமது மக்கள் மேற்கொள்ளும் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிடவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது. இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுதிட்டமாக அமைய வேண்டும்.
யுத்தத்தினால் சின்னாபின்னமாகிப் போயுள்ள எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்பி நாமும் உங்களைப் போன்று வாழ்வில் ஈடுபடும் வகையில் ஒரு இடைக்கால விசேட பொருளாதார கட்டமைப்பை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து, உருவாக்குங்கள். எம்மை நாமே ஆட்சி செய்து சுய கௌரவத்துடன், வாழ்வதற்கு எமக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை. அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடம் உள்ளார்கள். எமது மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தும் நபர்களுடன் முடிச்சுப் போட வேண்டாம். எமது இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்த காரணமாணவர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து வந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களே. இவற்றை அலசி ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்துங்கள் என்றார்.