முக்கிய அரசியல் தலைமைகளின் தலையீடு இன்றி தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 200 கோடி ரூபா மோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள நிதியின் பங்கு சீனாவுக்குரியதா அல்லது இலங்கைக்குரியதா என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 200 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதன் திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அதற்கமைய 2012 ஆம் ஆண்டே இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சீனாவின் நிதி உதவியுடனேயே இதன் நிர்மாண பணிகள் இடம்பெற்றிருந்தன. ஆகவே ஜனாதிபதி கூறுவது போன்று நிதி மோசடிகள் இடம்பெற்றிருந்தால அது எமது நாட்டிலுள்ள முக்கியஸ்தர்களின் பங்களிப்பு எதுவும் இன்றி இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. பலதரப்புடனான உடன்படிக்கையினூடாகவே இந்தக் கடன் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது. எனவே ஜனாதிபதி இது குறித்து விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தமக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதனை நான் அரசியல் செயற்பாடாகவே கருதுகிறேன். தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில் ஒரு சில இராணுவ வீரர்களை பிரதானமாக கொண்டு தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள்.
2009 ஆண்டு முப்பது வருட கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆகவே இந்த யுத்த காலப்பகுதியிலேயே அதிகளவான இராணுவ வீரர்கள் அங்கவீனப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது முதல் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கமே தொடர்ச்சியாக ஆறு வருடங்களை நாட்டை ஆட்சி செய்திருந்தது. அதற்கமைய இந்த காலப்பகுதிக்குள்ளேயே அங்கவீனமுற்றவர்களின் நிவாரணங்கள் அதிகளவில் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த காலப்பகுதிக்குள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அவ்வாறு அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனூடாக பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். எது எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் ஆட்சி புரிந்த இந்த நான்கரை வருடங்களில் இராணுவத்தினருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான வீட்டுத்திட்ட நிவாரணங்களை வழங்குதல் என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
தேர்தலுக்கு எங்களின் வேட்பாளர் தயாராகவே இருக்கிறார். இந்நிலையில் ஏனைய சிறுபான்மை கட்சிகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று நினைத்தவுடன் வேட்பாளரை எம்மால் அறிவிக்க முடியாது. சகலருடனும் கலந்துரையாடி தகுதியான வேட்பாளர் ஒருவரை அறிவிப்போம். அதுவரையில் சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.