நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக்கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தற்போது காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.
இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் இயக்குனர் கே.வி ஆனந்த் தரப்பில் பதில் மனுவில் வழக்கு தொடர்ந்த நபரை தெரியாது என்றும், வீண் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுக்களை ஏற்று காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை கடந்த செப்டம்பர் 9ம் தேதி தள்ளுபடி செய்து தனி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் ஜான் சார்லஸ் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.