உன்னதத்தின் ஆறுதல்! வாரம். 19. 38

தேவனின் ஆறுதலும், தேவ பிள்ளைகளின் முன்மாதிரியும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மாhக்கிற்காக பிரார்த்திப்போம்.

ஆதலால், பயப்படாதிருங்கள். நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். ஆதி.50:21

வாழ்க்கையில் நொந்துபோன மக்களை தொடர்ந்து நோகப்படுத்தவும், பயந்து போயிருக்கும் மக்களை பயப்படுத்தவும், வேதனையில் வாழும் மக்களை இன்னும் பயங்காட்டி வேதனைப்படுத்தவம்தான் மக்கள் இருக்கிறார்களே அல்லாமல், அவர்களை ஆற்றித்தேற்றி ஆறுதல்படுத்த, திடப்படுத்த அநேகர் முன்வருவதில்லை. மாறாக குற்றப்படுத்தவும், விமர்ச்சிக்கவும், குறையை அம்பலப்படுத்தவும் அநேகர் இருப்பதை எம்மைச் சுற்றியிருப்பதை நாம் காணலாம்.

இன்று புலம்பெயர்ந்த மக்களிடையே ஓர் இரக்கசுபாபம் ஏற்பட்டுள்ளதை பார்க்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். எமது தாய்நாட்டில் வாழும் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஆறுதலை, தேறுதலை புலம்பெயர்ந்த மக்கள்மூலம் பெற்றுக்கொண்டு, வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டுள்ளனர். இதேபோன்றதுதான் தேவனின் ஆறுதலும், தேவ பிள்ளைகளின் முன்மாதிரியும்.

வேதத்தில் கூறப்பட்ட ஓர் சம்பவத்தை தெரியப்படுத்த விரும்புகிறேன். இதனை நாம் ஆதியாகமம் இறுதிப்பகுதியில் காணலாம். குடும்பத்திற்குள் குழப்பம். அதன் விளைவு பழிவாங்கல். அழிவை நாடியதாக முடிந்தது. பாதிக்கப்பட்டவர் தேவபயத் துடன் வாழ்ந்தினால் தேவனுடைய தன்மையை வெளிப்படுத்தி முழுக்குடும்பத்தையும் காப்பாற்றக்கூடியதாக இருந்தது. இதனை ஆதி. 50:20ல் காணலாம். நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப் பண்ணினார்.

தீமையையும்கூட நன்மையாகமாற்ற தேவனால் மாத்திரமே முடியும். ஒருவனுடைய தவறையும்கூட தமது அநாதித்திட்டத்தினால் நன்மையாக மாற்றி தமது சித்தத்தை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார் நம்தேவன். இந்த அறிவு எமக்கு பலதடவைகளில் புரியாததாக, எமது அறிவிற்கு எட்டாததாக இருந்தாலும், நாம் தேவனின் குணா திசயத்தை அறிந்து கொள்ளும்போதுதான் இதனை அறியமுடியும். யுத்தம் வந்து அழிவை நாம் சந்திக்காவிட்டால் குறைவுள்ளவர்களை போசிக்க நாம் அறிந்தோ, செயற்பட்டோ இருக்கமாட்டோம். அறிவுக்கெட்டாத அந்த தேவனின் குணாதிசயத்தை இன்று நாம் எம்மையறியாமல் செய்துவருகிறோம்.

ஆதியாகமம் அதிகாரம் 50இல் சொல்லப்பட்ட யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிற்கு செய்தது தீமையே. தங்கள் வாழ்க்கையில் பின்னொரு காலத்தில் இப்படியான ஓர் நிலைமை வரும் என அவர்கள் சிறிதும் அறிந்தும் இருக்கவில்லை. அந்த நன்மையை எதிர்பார்த்து அவர்கள் தீமையை செய்யவில்லை. ஆனால் எல்லாக் காலங்களையும், நடக்கும் எல்லாவற்றையும் அறிந்த தேவன் அவர்கள் செய்த தீமையை அவர்களுக்கு நன்மையாக மாற்றினார்.

எமது நாட்டில் அழிவைக்கண்ட மக்கள் இன்று பிறர்மூலம் நன்மையை அனுபவிப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதேபோலத்தான் இன்று எம்மைச் சூழவுள்ள பலர் தேவனைத்தேடி, இயேசுகிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஆறுதலை விடுதலையை அடைந்து கொண்டதுடன் பலருக்கு ஆறுதலாகவும் இருப்பதை நாம் ஒருநாளும் மறுக்கமுடியாது. இதற்கு காரணம் அவர்கள் தேவனின் உண்மைத்தன்மையை கண்டுகொண்டதுதான்.

தேவனுடனான உண்மைத் தன்மையை நாம் எமது வாழ்வில் கண்டுகொள்ள அல்லது கடைப்பிடிக்க முதலில் நாம் தேவனை அறிய வேண்டும். அவரை அறிந்து நேசித்து, சேவிக்க நாம் முன் வரவேண்டும். அதாவது அவரை எமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பின் நிச்சயத்தை அவரின் சிலுவை மரணத்தை தியானிப்பதின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தை வாசித்து தியானித்து தேவனின் தன்மையை அறிந்து, அவர் விரும்பாத காரியங்களை எம்மை விட்டு அகற்ற வேண்டும். அப்போது நமது இருதயம் தேவனின் பிரசன்னத்தால் நிரப்பப்படுவதை உணரக்கூடியதாக இருக்கும். நாம் நமது அன்றாட வாழ்வில் ஓர் புதிய அமைதியை, சமாதானத்தை, மகிழ்ச்சியை காணக் கூடியதாக இருக்கும்.

தேவனுக்குப் பிரியாமான மக்களே, நம் வாழ்க்கையில் தேவனுடனான உண்மைத் தன்மை காணப்படுகிறதா? உண்மையில்லாத வாழ்க்கை ஒரு போதும் தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தை கொண்டுவராது. எமது இருதயத்தில் உண்மையும் எமது கரத்தில் பரிசுத்தமும் காணப்படுமானால் நாம் ஒருபொதும் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஓருபோதும் கலங்கவேண்டிய அவசியமில்லை. இன்று தேவனுடனான உண்மைத்தன்மையை அடைந்து கொள்;ள உண்மையுள்ள மனிதன் பரிப10ரண ஆசீர்வாதங்களைப் (ஆறுதலை) பெறுவான்என்ற தேவனின் வார்த்தையை மனதில் கொண்டவர்களாக உங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடர்ந்து ஓடுங்கள். உங்கள் இருதயங்களில் தேவன் வ்pரும்பும் உண்மைத்தன்மையை அவர் காணட்டும். அப்போது தேவனின் பரிபூரண ஆசீர்வாதங்களை (ஆறுதல்களை) சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

அன்பின் தேவனே, இன்று உம்முடைய உண்மைத்தன்மை கண்டுகொள்வதன்மூலம் மனுக்குலம் அடையும் ஆறுதல்களைப்பற்றி அறிய உதவியதற்காக எனது நன்றிகள். உம்மை அறிகிற அறிவிலே வளரவும், உமக்குள் நிலைத்து இருக்கவும் உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro.Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

————-

குறிப்பு : மதக்கருத்துக்கள் அனைத்தும் படைப்பாளிகளுடையதே அலைகள் அதற்கு பொறுப்பேற்காது..

Related posts