அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடித்துள்ள பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். விழாவில் விஜய் பேசியதாவது:-
“வாழ்க்கை என்பது கால்பந்து போட்டி மாதிரிதான். நாம் கோல் அடிக்க முயற்சி செய்வோம். ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்முடன் இருப்பவனே ‘சேம் சைடு’ கோலும் போடுவான். யாருடையை அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் அவர் மாதிரி வர வேண்டும். இவர் மாதிரி வரவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படாதீர்கள். அதற்கு அவர்களே இருக்கிறார்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வரக்கூடாது. யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வையுங்கள்.
வேண்டியவன் வேண்டாதவன் என்பதை விட்டு விட்டு திறமையை வைத்து எதையும் முடிவு செய்யுங்கள். பேனர் விபத்தில் மரணம் அடைந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சமூக பிரச்சினைகளுக்கு ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்க வேண்டும். இந்த பிரச்சினையில் யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு லாரி ஓட்டுனர், பேனர் அச்சடித்தவர்கள் மீது பழி போடுகிறார்கள்.
எனது பேனர் கட் அவுட்களை கிழியுங்கள், உடையுங்கள். என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள். ஆனால் எனது ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். உழைத்தவனை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகன். எம்.ஜி.ஆர் காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டார். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.”
இவ்வாறு விஜய் பேசினார்.