2,600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்

நகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு வியப்பையும் தமிழருக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் உறங்கிக்கிடந்த தென்னந்தோப்பில்தான் 2014 ஆண்டு வரை புதைந்திருந்தது தமிழர் நகர நாகரீகம். வறட்சியால் விளையாட்டு மைதானமாக மாற்றம் பெற்ற தென்னந்தோப்பில் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காகத் தோண்டியபோது தென்பட்ட செங்கல் சுவரில் ஆரம்பமானது தமிழரின் புதிய வரலாறு.

2014 ஆம் தொடக்கம் இதுவரை ஐந்து கட்டங்களாக இந்தியாவின் மத்திய தொல்லியல் துறை அகழ்வாய்வில் ஈடுபட்டுவருகின்றது. இதன் முதலாம் கட்ட ஆய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளுக்கு அமைவாக, இப் பகுதியில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உலகமே வியக்கும் அளவிற்கு தமிழரின் நகர நாகரீக வாழ்க்கை முறையும் தொழில்நுட்பங்களும் அமைந்திருந்தன. இவை அனைத்திற்கும் மேலும் வலுசேர்க்கும் வகையில் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலாலர் த. உதயசந்திரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள்

தமிழ் பிராமி எழுத்தின் காலம் 2 நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி நகர்கின்றது.

தமிழ் பிராமி எழுத்துகளின் காலமானது கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்து பதிக்கப்பட்ட மட்பாண்டங்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் மேலும் 2 நூற்றாண்டுகள் பழமையானது என்ற முடிவு எட்டப்பட்டது. இப்போது கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பழமையானது என்ற முடிவுக்கு இது இட்டுச்செல்கிறது. அதன்படி தமிழ் பிராமி எழுத்துக்கள் 2600 ஆண்டுகள் பழமையானது.

தமிழகத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்

தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடி நகர நாகரிகத்திற்கான முதலாவது அடையாளமாகும் இதன் மூலம் இதுவரையும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருந்ததைப் போன்ற ஒரு நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்ற கருத்து உடைக்கப்படுகின்றது.

இதுவரை காலமும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பமான தமிழ்நாட்டின் வரலாறு கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை பின் நோக்கிச் செல்கின்றது.

கீழடியில் அகழ்வாய்வு மூலம் தோண்டியெடுக்கப்பட்ட நகர நாகரீகத்தின் அடையாளங்களான செங்கற்களால் ஆன வீடுகள், கழிவுநீர் போக்கிகள்,சுவர்கள், உறைக் கிணறுகளுடன் கூடிய ஒரு பகுதி என்பன கங்கைச் சமவெளி நாகரீக காலகட்டத்திலேயே தமிழகத்திலும் ஒரு நகர நாகரீகம் இருந்தது என்பதை நிறுவுவதற்கு ஆதாரமாகின்றது. இது கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்பதை விளக்குகின்றது.

2600 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

இங்கு கிடைக்கப்பெற்ற பானை ஓடுகளில் காணப்படும் பெயர்கள் பானையைச் செய்யும் போது எழுதப்பட்டதாகவும் இன்னும் சில பானைகள் சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டவையாகவும் அறியப்பட்டுள்ளது. இந்தப் பெயர்கள் பானையை வாங்கியவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வெவ்வேறு பானைகளில் வெவ்வேறு விதமான எழுத்து வடிவங்கள் இருப்பதால், பலரும் இதை எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த சமூகத்தில் பலரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.

எழுத்து உருவாக்கத்தைக் காட்டும் கீறல்கள்இக் கீறல்கள் கொண்ட மட்பாண்டங்கள் இன்னொரு செய்தியையும் தருகின்றது. இம்மாதிரியான கீறல்கள் கங்கைச் சமவெளியில் பெரிதாகக் கிடைக்கவில்லை. கீழடியில் மட்டும் 1001 பானைக் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. இது கீழடியில் எழுத்து உருவாவதைக் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கூரை அமைப்புடைய கட்டடங்கள்இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகள் கட்டடத்துறையில் இங்கு வாழ்ந்த தமிழரின் வளர்ச்சியை காட்டுகின்றது. இவற்றின் தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிருக்கின்றன.

பானை வனையும் தொழிற்கூடம்கீழடியில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்கு கீழ் மிகப் பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கிடைத்ததை வைத்துப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.

வேளாண்மை சமூகம்

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53%) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

நெசவுத் தொழிலின் அடையாளங்கள்

கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தங்க ஆபரணங்கள் அணியும் பெண்கள்கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. அத்துடன் பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை நகர நாகரீகத்தின் புதிய பரிணாமத்தை காண்பிக்கின்றன.

விளையாட்டுப் பொருட்கள்கீழடியில் வாழ்ந்த தமிழ் குடிகள் விளையாட்டிற்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை அங்குக் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மூலம் அறிய முடிகின்றது. இங்கு பெரும்பாலும் சுட்ட மண்ணால் உருவாக்கப்பட்ட ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சமயச் செயல்பாடுகளில் குறைவான ஈடுபாடுஇங்கு சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கீழடியில் நகர நாகரீகத்தின் அடையாளம். இங்கு வழிபாட்டுக்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. இங்கு வாழ்ந்த மக்கள் தமது வாழ்வியல் மேம்பாட்டில் அதிக அக்கரையுடன் செயற்பட்டுள்ள போதிலும் சமய வழிபாடுகளில் ஈடுபாடு குறைந்தவர்களாக காணப்பட்டுள்ளனர். ஆனால், இதற்குப் பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும் வணங்கவில்லை என்பதல்ல, சமயம் சார்ந்த செயல்பாடுகள் அவர்களின் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கவில்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. என்கிறார்கள் ஆய்வாளர்கள்.சங்க இலக்கியத்திற்கும் கீழடிக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றார் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் இயக்குநரான ஆர். பாலகிருஷ்ணன்.

“இந்த ஆய்வு முடிவுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறார்கள். சங்கப் பாடல்கள் அந்த காலகட்டத்து மண்ணையும் மனிதர்களையும் பாடின. அந்தப் பாடல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை இங்கே கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. சங்க காலப் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூக மிக உயர்ந்த நாகரீகம் கொண்டதாகத் தென்படுகிறது. அப்படி ஒரு நாகரீகம் இருந்திருந்தால்தான், அம்மாதிரியான பாடல்கள் உருவாகியிருக்க முடியும். அதற்கான ஆதாரமாகத்தான் கீழடி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Related posts