நீதிமன்ற உத்தரவை மீறிய தேரர்களின் செயற்பாடானது தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் சரியென்பதை நியாயப்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.
மேலும், செம்மலை நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டுமெனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் விடயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதிலிருந்து ஒன்று மட்டும் புலப்படுகிறது. சட்டம் தமிழர்களுக்கு ஒன்று பௌத்த மத குருக்களுக்கு ஒன்று. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.
சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நம்பிக்கை வைத்துள்ளன.
ஆனால், இன்றைய நிகழ்வுகள் ஒருபோதும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை உணர்த்தி நிற்கின்றன. கடந்த கால எமது ஆயுதப் போராட்டங்களும் இப்படிப்பட்ட பாதிப்புக்களாலேயே ஏற்பட்டதென்பதை ஏன் பேரினவாதம் உணர்ந்து கொள்ளவில்லை என்றார்.
மன்னார் குறூப் நிருபர்