அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ‘இந்தியாவின் தந்தை’ என்று அழைத்தது வெறும் உயர்வு நவிற்சி, வெறும் அலங்காரச் சொல்தான், அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய கம்யூனிச்ட் கட்சியின் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப் இது போன்ற உயர்வு நவிற்சி அலங்கார ஜோடனைகளுக்கு பெயர் பெற்றவர், நாம் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையிலலி. யாரை இந்தியாவின் தந்தை என்று மதித்து அழைக்க வேண்டும் என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.
இந்த பட்டத்தை மகாத்மா காந்திக்குத்தான் மக்கள் வழங்கியுள்ளனர்” என்றார்.
மேலும், ‘இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாக நினைக்காதவர்களை இந்தியர்களாக கருதவேண்டாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதற்கு பதில் அளித்த டி.ராஜா,
“இது அபத்தமான கூற்று.
ட்ரம்ப் யார்? அவர் அமெரிக்காவின் அதிபர் மட்டுமே. இந்தியாவின் தந்தை யார் என்று அவர் தீர்மானிப்பாரா? நட்பு என்பது வேறு, அந்த உறவு குறித்து நமக்கு அக்கறையில்லை. இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய அக்கறை கொள்கிறோம்.
இந்தியா அமெரிக்காவிடம் தன் இறையாண்மையை விட்டுக் கொடுத்துவிட்டதா, அல்லது அதை தடுக்கிறதா என்பதே நம் அக்கறை.” என்றார்
ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதில் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அடுல் குமார் அஞ்சன், “மோடியை மார்டின் லூதர் கிங்குடன் ஒப்பிடவில்லை, அதுவரையில் கடவுளுக்கு நன்றி”, என்றார்.