ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொள்கைகளை அடிப்படையாக கொண்டு முன்நோக்கி பயணிப்பவர் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று ஏகமனதான முடிவு செய்தமை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த முடிவு தெடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவரின் வெற்றி நிச்சயம் எனவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் வாழும் அறிவாளிகள் வெளிநாட்டு குடிமகனுக்கோ அல்லது கொள்ளையர்களுக்கோ ஆட்சியை ஒப்படைக்கமாட்டார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டின் பொறுப்பை உணர்ந்த இளைஞர்கள் குழுவை நாட்டிற்கு அறிமுகப்படுத்த தயார் எனவும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குற்றவாளிகளுடன் பேசுவதாகவும், பொலிஸாரும் சில அரசியல்வாதிகளும் குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் கூறினார்.
இதன்போது வடக்கு, கிழக்கு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர் ஜனநாயக முன்னணி வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, முழு நாட்டையும் வெற்றிக்கொள்ளும் என குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவுக்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை எனவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது எனவும், வேட்பாளர் ஒருவருக்கு நிபந்தனை முக்கியமல்ல எனவும் கொள்கையே முக்கியமானது எனவும் கூறினார்.
எதிர்காலத்தில் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி கட்சியின் கொள்கையை வகுப்பார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.