மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.
பொதுவாக சஜித் பிரேமதாசாவின் வீட்டுத் திட்டங்களில் கலந்துகொள்ளும் போது எதிர்கால ஜனாதிபதியாக வரவிருப்பவர் என்ற ரீதியில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றோம். ஆனால், ஆதரவு கொடுப்போம் என்ற சொல்லை நாங்கள் பாவிக்கவில்லை ஏன் என்றால் எதையும் நாங்கள் ஆராய்ந்து பார்த்துத் தான் முடிவெடுக்க வேண்டும்.
சஜித் பிரேமதாசாவைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் அதே போன்று புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பான நடவடிக்கையில் அவரின் ஈடுபாடு எங்களைப் பொறுத்த வரையில் மிக குறைவாகவுள்ளது.
அவர் அவரின் தந்தையின் வழியில் தான் செயற்படுவேன் என்பதில் உறுதி கூறிக்கொண்டு வருகிறார். உண்மையிலேயே அவரின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் பல துன்பியல் நிகழ்வுகள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. அது வரலாற்று ரீதியாக என்றும் மறக்க முடியாத உண்மை.
ஆகவே, அவருடன் நாங்கள் பல விடயங்கள் பேச வேண்டும் அவர் எங்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவாராக இருந்தால் தான் அவரது நிலமையை அவருக்கு சார்பாக போவதை பரிசிலிக்கலாம் எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வு எங்களுக்கு மிக முக்கியமானது.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இருக்கலாம் அல்லது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக இருக்கலாம், யார் எங்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க வருகின்றார்களோ எங்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப சரியான முடிவை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்றார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)