தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்துள்ள ரூ.10 கோடி மோசடி புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரத்தில், குற்றவாளி ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருக்கிறாரே. அது பற்றி?.
பதில்:- ஜெயகோபாலுடைய கைதை கேட்டு சந்தோஷப்படுவதைவிட நிம்மதி பெருமூச்சு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு அது தாமதமாக கிடைத்தாலும், கிடைத்திருக்கிறது என்ற ஒரு நிம்மதி இருக்கிறது. இது பெற்றோருக்கு பெரிய ஆறுதலை கொடுக்காது என்றாலும், ஒரு சிறிய ஆறுதலை கொடுக்கும் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கிறது.
கேள்வி:- நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி சொல்லியிருக்கிறாரே?.
பதில்:- நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதற்காக போட்டியிட்டோம் என்பதை பகிரங்கமாக சொன்னோம். வெற்றியை விட எங்களுக்கான முனைப்பு, பயிற்சி பெறுவதில் இருந்தது. மற்றபடி அவர் சொன்ன பதிலை நண்பராக எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்படி ஏற்றுக்கொள்வோம்.
கேள்வி:- என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பகவத் கீதை கட்டாயப் பாடமாக கேட்கப்பட்டிருக்கிறதே?.
பதில்:- எதை வேண்டுமானாலும் அவர்கள் படிக்கலாம். எல்லா வகையான புத்தகங்களும் படிக்க வேண்டும். அது ஆசிரமங்களில் கிடைக்கிறது. கோவில்களில் கிடைக்கிறது. நூலகங்களில் பார்க்கலாம். பாடமாக படித்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்க தேவையில்லை. அதை விரும்புபவர்கள் வாங்கிப் படிப்பார்கள். அதுபோன்ற மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். நானும் அதில் ஒருவன்.
கேள்வி:- கீழடி தமிழர் நாகரிகமா? திராவிடர் நாகரிகமா? என்ற கேள்வி எழுந்துள்ளதே?.
பதில்:- அதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதற்கு பதில் கிடைப்பதற்கு முன்னால், இதுதான் பதிலாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எப்படி இந்தியை திணிக்கக்கூடாது என்று சொல்கிறோமோ, அதேபோல், கீழடியையும் நாம் திணிக்கக்கூடாது. நாம் பழைய குடி என்பதில் இனி எந்த சந்தேகமும் வேண்டாம். அது பல்லாயிரக்கணக்கான வருடம் முன்பே தெரிந்த சம்பவம். எத்தனை ஆயிரம் பழமையானது என்பதை வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை திராவிடம் நாடு தழுவியது. அது தென் பகுதியில் மட்டும் இருக்கிறது என்பது கிடையாது. திராவிடம் என்பது இனக்குறிப்பாக இருந்தால் அது நாடு தழுவியது.
கேள்வி:- தயாரிப்பாளர் சங்கத்தில் உங்கள் மீது புகார் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். உத்தம வில்லன் படத்திற்காக உங்களுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக ஞானவேல் ராஜா சொல்லியிருக்கிறார். அதற்கு நீங்கள் விளக்கமும் அளித்திருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன?.
பதில்:- அதற்கான விளக்கத்தை எங்கள் வக்கீல் நோட்டீஸ் மூலம் அங்கு அனுப்புவார்கள். உத்தமவில்லன் படத்திற்கும், ஞானவேல் ராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு சம்பந்தம் திருப்பதி பிரதர்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த சகோதரர்கள் தான். அவர்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும்.
கேள்வி:- இவ்வளவு நாள் இந்த குற்றச்சாட்டு வராமல் தற்போது வந்திருக்கிறதே?.
பதில்:- அதில் இருந்தே தெரியவில்லையா. பின்னணி என்னவாக இருக்கும் என்பது தெரியாது. முன்னணியில் இருப்பவர்கள் சரியில்லை. காலம் பதில் சொல்லும். நீதி பதில் சொல்லும்.
கேள்வி:- டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் மொழித்தாள் பிரதானமாக இருக்கும். அது நீக்கப்பட்டிருக்கிறதே?.
பதில்:- எனக்கு வேண்டாம் என்ற மொழியை திணிக்கிறார்கள். வேண்டும் என்ற மொழியை தடுக்கிறார்கள். எல்லா மொழிகளும் இந்த நாட்டுக்கு முக்கியம். இந்த மொழி குடும்பத்தில் கடைக்குட்டி இந்தி. சமீபத்தில் பிறந்தது அந்த அற்புதமான மொழி. அந்த குழந்தையையும் மூத்த மொழிக்காரர்களாக நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்காக அந்த குழந்தையை எங்கள் கையில் கொடுத்து வளர்க்க சொல்லாதீர்கள். அது உங்கள் வீட்டு குழந்தை. நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.