ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (02) காலை 9.30 மணியளவில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் வௌிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக குறித்த அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் முறைப்பாட்டாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளனர்.