கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி ஆவணமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் இழுக்காகும் என சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
கோட்டாபய ராஜபக்ஷக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதாகக் கூறி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி ‘புரவெசி பலய’ அமைப்பின் இணை அமைப்பாளரான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த றிட் மனுவானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டத்தரணி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
வழக்கு விசாரணையின் போது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதியன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமையை சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மேலும் பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான அமைச்சில் 2005 நவம்பர் 18 ஆம் திகதிக்கும் 2005 நவம்பர் 22 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் செயலாளர் ஒருவர் இருக்கவில்லையென்றும் அவ்வாறானதொரு நிலையில் செயலாளர் சார்பில் வேறு எவரும் கையொப்பமிட முடியாத பட்சத்தில் இச் சான்றிதழ் போலியாகவே தயாரித்து வழங்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
அத்துடன் இக் காலப்பகுதிக்குள் கோட்டாபய ராஜபக்ஷவினால் எந்தவொரு ஆவணத்தையும் மேற்படி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ், சட்டப்படி செல்லுபடியாகாதது. இது முன்னாள் ஜனாதிபதியினால் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டது என வாதிட்டார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மேற்படி றிட் மனு மீதான முதற்கட்ட எதிர்ப்புகளை முன்வைத்தார்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவடையாததால் இம் மனுவை தொடர்ந்து விசாரணைக்குட்படுத்த முடியாது. மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மனுவில் குறிப்பிடப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ் வழக்கில் சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கோட்டாபயவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் இல்லையென தெரிவித்தார்.
அதேநேரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அனைத்து தரவுகளும் 2007 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பின் 42(2) சரத்துக்கமைய, அமைச்சர்களுக்கு அமைச்சுக்கள் பகிர்ந்து வழங்கப்படும் வரை ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சின் விடயம் தொடர்பிலும் செயற்படுவதற்கான அதிகாரம் உண்டு. அதனடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்புக்கமைய பிரஜாவுரிமை தொடர்பான அமைச்சுக்காக செயற்பட்டுள்ளார் என்றும் வாதிட்டார்.