கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை பிஹார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.
நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், கடந்த ஜூலை 23-ம் தேதி இயக்குநர் மணிரத்னம், திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்க திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர்.
இந்தக் கடிதத்துக்கு எதிராக பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், ” 50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவதுபோன்று இருக்கிறது. ஆதலால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி இருந்தார்”.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம்தேதி முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்ய காந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், இந்த வழக்கை பிஹார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.
முசாபர்பூர் காவல்துறை அதிகாரி மனோஜ் குமார் சின்ஹா கூறுகையில் ‘‘புகார் குறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அந்த புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.