சீன அதிபர் வருகை நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு

நாளை (11-ம் தேதி) பிற்பகல் ஒன்றரை மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் கலாச்சார வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 1.55 மணிக்கு சென்னை நட்சத்திர விடுதியில் உணவு அருந்துகிறார். அங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு, மாலை 4.10 மணிக்கு ஜி ஜின்பிங் மாமல்லபுரம் புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்கிறார்.

அர்ஜுனன் தபசு வரலாற்றை ஜி ஜின் பிங்கிடம் பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். அங்கிருந்து வெண்ணை திரட்டி பாறைக்கு சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். 5.18 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று வரலாற்றுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர். 5.43 மணிக்கு கடற்கரை கோயிலை சென்று பார்வையிடுகின்றனர். அங்கு கலாஷேத்ராவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கடற்கரை கோயிலின் புல் தரையிலேயே இரு தலைவர்களும் மாலை 6,45 மணி முதல் இரவு 8 மணிவரை உணவு அருந்துகின்றனர். இதையடுத்து, சென்னைக்கு திரும்பி நட்சத்திர விடுதியில் தங்குகின்றனர். சனிக்கிழமை காலை 9.40 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு இருவரும் செல்கின்றனர். அங்கு 11.30 மணிக்கு இரு நாட்டு தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அங்கேயே மதிய உணவு அருந்தும் தலைவர்கள், மதியம் 1.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, சென்னை வருகின்றனர்

இதற்கிடையே, மாமல்லபுரத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட வருமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளை இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒன்றாக அமர்ந்து பார்க்க உள்ளனர். கலை நிகழ்ச்சிகளில் பார்வையிட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு ரஜினிகாந்த் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல் சீன அதிபர் வருகையின்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts