தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மேலும் ஐந்து பேர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலாக்கா பேன்னெங், மற்றும் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை இவர்களது கைதுதொடர்பில் கூறிய, மலேசிய பொலிஸ் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான், கைதானவர்கள் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக நம்புவதாகத் தெரிவித்தார்.