ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட எவரேனும் இன்னுமொரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஆதரவாளர்களை கோருவது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரை வேட்பாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமிருப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எந்தவொரு வேட்பாளரும் தனக்கன்றி பிறிதொரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோருவது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும். அவ்வாறான பிரசாரங்கள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அவர்களுக்கு எதிரான சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தில் வேட்பாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழு அவரை வேட்பாளர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் கூறினார்.
பிற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோருபவர்களை உண்மையான வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அவர் கூறினார்.
இதேவேளை தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிர்வரும் 07ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
லக்ஷ்மி பரசுராமன்