சஜித் பிரேமதாசவின் 5 வருட ஆட்சியை அவதானித்து அதன் பின்னரே அவருக்கு மேலும் 5 வருடங்களை வழங்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
அந்த கூட்டணியின் உப தலைவர்களில் ஒருவரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ருவான்வெல்ல என்.எம். பெரேரா மண்டபத்தில் இன்று (15) விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மலையக மக்கள் ஏனைய இனத்தவருக்கு சமாந்தரமான உரிமை உடையவர்களாக மாற வேண்டுமாயின் அவர்களின் தொடர்வீட்டு (லயன் முறை) இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனிவீட்டு திட்டத்தின் பிதாமகன் அமரர் சந்திரசேகரனை பின்பற்றி இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குரிமைக்காக அவரின் புதல்வருக்கு வாக்களித்து நன்றி கடனை செலுத்த வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு மலையக மக்கள் தமது நன்றி கடனை நிறைவேற்றுவது போல் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதுடன் மலையகத்திற்கு செய்நன்றி உடையவராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு நன்றியுடையவாக இருந்தால் மாத்திரமே அடுத்து வரும் 5 வருடங்களையும் ஆட்சி செய்ய மலையக மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு சந்தர்பமளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த முனையும் சந்தர்ப்பத்தில் மக்களின் இதய துடிப்பை ஒருபோதும் அறியாத கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.